tamilnadu

img

செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது

திருவள்ளூர், ஏப். 26-திருவள்ளூரை அடுத்த பிச்சிவாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் அருகே உள்ள ஓரத்தூர் கிராமத்தை சேர்ந்த சினேகாவுக்கும் (வயது19) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.இந்தநிலையில் சினேகா கர்ப்பம் அடைந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக பட்டரை பெருமந்தூரை அடுத்த ராமஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். வியாழனன்று இரவு 7 மணி அளவில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பட்டரை பெரும்மந் தூரில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அப்போது அங்கு டாக்டர் பணியில் இல்லை. இதனால் செவிலியர்களே சினேகாவுக்கு பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறதுசிறிதுநேரத்தில் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை எந்தவித அசைவும் இன்றி இருந்தது. இதேபோல் சினேகாவுக்கும் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் உடனடியாக சினேகாவையும், குழந்தையையும் 108 ஆம்புலன்சு மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் சினேகாவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் அவருக்கு கர்ப்பப் பையை அகற்ற வேண்டும் என்றும் கூறினர். இதுபற்றி அறிந்ததும் சினேகாவின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தான் இந்தநிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுகாதாரத்துறை இயக்குனர் கிருஷ்ணராஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு நடத்தினர். இதில் சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மருத்துவ குழுவினர் சினேகாவின் கர்ப்பப்பையை அகற்றினர். எனினும் அவரது நிலைமை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சினேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.இதற்கிடையே குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. சினேகா பட் டரை பெருமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு பணியில் இருக்கவேண்டிய டாக்டர் வேப்பம்பட்டில் தனியாக நடத்தும் தனது கிளினிக்கில் இருந்ததாக கூறப் படுகிறது. அவர் பணியில் இருந்திருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். சினேகாவுக்கும் இந்தநிலை ஏற்பட்டு இருக்காது என்று பொது மக்கள் கூறினர்.