ஈராக்கில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இடத்தில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் படுகொலை செய்தது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான் அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஈராக்கில் பாக்தாத் அருகே உள்ள அன் ஆல் ஆசாத் மற்றும் ஹாரிர்கேம்ப் விமானத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈராக்கில் பசுமை மண்டல பகுதி (Green zone) என்று அழைக்கப்படும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இரண்டு முறை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியன அமைந்துள்ள அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு, பயங்கர சத்தத்துடன் 2 முறை ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என ஏஎப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.