அடக்கம் அழியாப் புகழைக் கொடுக்கும்
அடங்காமை வாழ்வை இருளாய்க் கெடுக்கும்!
அடக்கமும் செல்வமே போற்றிக் காக்க
அதைவிட செல்வம் வேறெது நோக்க!
அறிவதை அறிந்து அடக்கமும் போற்று
ஆற்றல் பண்பை அகிலமும் போற்றும்!
உறுதியாய் உள்ளம் ஆர்த்திடா அடக்கம்
உயர்வாய் மலையினும் உயர்ந்து சிறக்கும்!
பணிவுடன் இருப்பது பயன்தரும் யார்க்கும்
பயன்படும் செல்வர்க்கு மேலும் பயன்தரும்!
பணிவுடன் ஐம்பொறி அடக்கி ஆமைபோல்
பயின்றிட வாழ்க்கைக் கரணாய் அமையும்!
காத்திடு முதலில் நாவின் அடக்கம்
காக்கா விட்டால் குற்றம் பிறக்கும்!
காத்திடும் பாலில் ஒருதுளி நஞ்சு
கலந்தது போலவே தீச்சொல் ஆகும்!
தீப்புண் ஆறும் நாப்புண் வடுவாய்
தீரா தென்றும் நெஞ்சில் நிலைக்கும்
காப்பவை காத்துக் கற்பவைக் கற்றுக்
கணிந்திட அறமுனைத் தேடிப் பற்றும்!