tamilnadu

img

தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுக

 சிஐடியு மாநில மாநாடு வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,செப். 20- தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் சிஐடியு 14வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின் விவரம் வருமாறு: தனது கார்ப்பரேட் ஏஜமானர்களுக்கு சேவகம் செய்யக்கூடிய வகையில் அவசரகதியில் தொழிலாளர்களுக்கு அரணாக இருக்கும் தொழிலாளர் சட்டங்களை திருத்தி நான்கு தொகுப்புகளாக வகைப்படுத்தி, தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை நீர்த்து போகச் செய்யத் துடிக்கும் பாஜக அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தொழில்சார் பாதுகாப்பு நலன் மற்றும் வேலை நிலைமைகள் - 2019 மசோதாவினை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்து. தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டுள்ளது. இந்த மசோதா தற்போது உள்ள 13 முக்கியமான தொழிலாளர் சட்டங்களை நீக்கி முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களையும் உரிமைகளையும் சேதப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அடிப்படை சுகாதார பாதுகாப்பு இல்லாமல் மடிகின்றனர், நோய்வாய்ப்பட்டு அவதிப்படுகின்றனர். தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், முறையான அமலாக்கம் போன்ற விஷயங்களில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தங்களது கருத்துகள் மற்றும் உரிமைகளை எடுத்துக் கூற முடியாத நிலை அந்த மசோதாவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கும் நிறுவனங்கள் தங்களது பொறுப்புணர்வை மீறுகின்ற போது அவற்றை எடுத்துக் கூற சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள உரிமைகளை இந்த மசோதா நிராகரிக்கிறது. இதுபோன்ற முதலாளிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை நாட்டின் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கடுமையாக உறுதியாக எதிர்க்கின்றன. மத்திய அரசு இந்த எதிர்ப்பை முற்றிலுமாக புறக்கணித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.