tamilnadu

img

இந்நாள் பிப். 15 இதற்கு முன்னால்

1493 - இந்தியாவைத் தேடிய பயணங்களில் முதலாவதை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பகுதிகள் பற்றி, லா நினா கப்பலிலிருந்து, கொலம்பஸ் கடிதம் எழுதினார். ‘கங்கைக்கு அப்பாலுள்ள இந்தியாவின் தீவுகளை’ கண்டுபிடித்துவிட்டதாக, அக்கடிதத்தில் கொலம்பஸ் எழுதியிருந்தார். ‘கங்கைக்கு உட்பட்ட இந்தியா’ என்பது, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளைக் குறிக்க, தாலமி போன்ற பண்டைய (மேற்கத்திய!) புவியியலாளர்கள் பயன்படுத்திய பெயராகும். அதன்படி, கங்கைக்கு அப்பாலுள்ள இந்தியா என்பது, தற்போதைய இந்தோனேஷியப் பகுதிகளைக் குறித்தாலும், உண்மையில் அந்த இடத்தை கொலம்பஸ் அடையவில்லை. இந்தியப் பெருங்கடலின் கடைசியில் அமைந்துள்ள, ஆசியத் தீவுகளைக் கண்டறிந்த தாக எழுதிய கொலம்பஸ் உண்மையில் அடைந்தது, அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த, கரீபியத் தீவுக்கூட்டங்களிலுள்ள ஹிஸ்பேனியோலா, கியூபா உள்ளிட்ட 6 தீவு களைத்தான். பயணத்தைப்பற்றி எதுவும் குறிப்பிடாத கொலம்பஸ், 33 நாட்கள் பயணம் செய்து இந்தியத் தீவுகளை(லஸ் இண்டியாஸ்) அடைந்ததாகவும், அனைத்தையும் தங்கள் அரசருக்குச் சொந்தமென்று அறிவித்துவிட்டதாகவும், அங்கிருந்த ‘இந்தியர்கள் (உண்மையில் அவர்கள் ஆரவாக் என்ற தொல்குடியினர்!) அதனை எதிர்க்க வில்லையென்றும், அருகிலேயே சீனாவும் இருப்பதாக நம்புவதாகவும் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

ஸ்பெயினின் அரசர்-அரசிக்கும், பயணத்திற்கு அரசின் அனுமதி கிடைக்க உதவியதுடன், நிதியுதவியும் அளித்தவரான, ஸ்பெயின் கருவூல அலுவலர் லூயி-டி-சாண்ட்டாஞ்சல் என்பவருக்குமாக, இரண்டு பிரதிகளாக கொலம் பஸ் எழுதிய இக்கடிதத்தின் மூல (கையெழுத்து) பிரதி யாரிடமும் இல்லை. அக்காலத்தில் தான் அச்சு இயந்திரம் அறிமுகமாகியிருந்த நிலையில், (அனேகமாக சாண்ட்டாஞ்ச லுக்கு எழுதப்பட்ட) கொலம்பசின் ஸ்பானிய மொழிக் கடிதம், பதிப்பகங்களுக்குக் கிடைத்து, உடனடியாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டது. ஒரு மாதத்தில் லத்தீனில் பொழிபெயர்க்கப்பட்டு, ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வெளியிடப்பட்ட இக்கடிதமே, கொலம்பசின் பயணம், புதிய நிலப்பரப்புகளின் கண்டுபிடிப்பு ஆகியவை ஐரோப்பா முழுவதும் தெரியக் காரணமாகியது. கொலம்பசின் பயணக்குறிப்புகள் 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்படும்வரை, கொலம்பசின் ஒரே நேரடிப்பதிவாக விளங்கிய இக்கடிதம், 1493-1500இல் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகி, அக்காலத்தின் மிகஅதிகம் விற்பனையான வெளியீடுகளுள் ஒன்றானது. நிறையக் கப்பல்களுடன் சென்று, தங்கம், மணமூட்டிகள், பருத்தி, கற்றாழை, அடிமைகள் ஆகிய வற்றுடன், தான் கேள்வியுற்றிருக்கிற (பார்த்திராத!) லவங்கப்பட்டை போன்றவற்றை யும் ஏராளமாகத் தன்னால் கொண்டுவரமுடியும் என்றும், அதற்கு கத்தோலிக்க அரசர்கள் உதவ வேண்டுமென்றும், அக்கடிதத்தின் இறுதியில் கொலம்பஸ் குறிப்பிட்டிருந்தார்!

- அறிவுக்கடல்