tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 01 இதற்கு முன்னால்

கி.மு.331 - பாரசீக அக மானீயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்ட, (தற்போதைய இராக்கிய குர்திஸ்தான் பகுதியின்) கவுகமேலா(ஆர்பேலா) யுத்தத்தில், அகாமனீயப் பேரரசர் மூன்றாம் டேரியசை, கிரேக்கத்தின் மகா  அலெக்சாண்டர் தோற்கடித்தார். சுமார் 10 லட்சம் வீரர் களைக்கொண்டிருந்த (தற்காலத்திய வரலாற்றாசிரி யர்கள் குறைவாக மதிப்பிட்டாலும்) மாபெரும் படை யான மூன்றாம் டேரியஸின் படையை, சாதுரியமான வியூகங்கள், காலாட்படையின் சிறப்பான பயன்பாடு ஆகியவற்றின்மூலம் அலெக்சாண்டர் மிக எளிதாகத் தோற்கடித்தார். பாரசீகத்துக்கு எதிரான போர்களில் ராணுவங்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் நோக்கத் தோடு, இரண்டாம் பிலிப் அரசரால் கி.மு.338இல் தோற்றுவிக்கப்பட்டிருந்த ஹெல்லனிக் லீக் (‘கோரின்த்’-தின் லீக்) என்ற கிரேக்க நாடுகளின் கூட்டணிப்படையைத் தலைமையேற்றுப் போரிட்டு அலெக்சாண்டர் இந்த வெற்றியை ஈட்டினார்.

அலெக்சாண்டரின் ஆசியப் படை யெடுப்பின் இரண்டாவது பெரிய யுத்தமாகக் குறிப் பிடப்படும் (தற்போதைய துருக்கியிலுள்ள) இஸ்ஸோஸ் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில், ஏற்கெனவே இதே அணியிடம் தோற்ற டேரியசின் தாயார், மனைவி, மகள்கள் அலெக்சாண்டரிடம் பிடிபட்டிருந்ததுடன், ஆசியா மைனரின் தென்பகுதியும் அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. அத்தோல்விக்குப்பின் கைதிகளுக்குப் பதிலாகப் பணயத்தொகை தருவதான டேரியசின் வேண்டுகோள் அலெக்சாண்டரால் நிராகரிக்கப்பட்டது. இதன்பின் டைர் பகுதியை அலெக்சாண்டர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, டேரியசின் இரண்டாவது கடிதத்தில் அதிகாரத் தோரணை மறைந்துவிட்டதுடன், ஒரு மகளை அலெக்சாண்டருக்குத் திருமணம் செய்து தருவதுடன், ஹேலிஸ் ஆற்றின் மேற்கிலுள்ள பகுதிகளையும் தருவதாக டேரியஸ் கோரியதையும் அலெக்சாண்டர் நிராகரித்தார்.

மூன்றாவது கடிதத்தில், தாயாரை நன்றாகப் பார்த்துக்கொண்டதற்கு நன்றி தெரிவித்து, பெரும் பணயத்தொகை, யூப்ரடிஸ் நதிக்கு மேற்கிலுள்ள அனைத்துப்பகுதிகள் ஆகியவற்றை அளிப்பதுடன், அகாமனீயப் பேரரசின் ஆட்சியிலும் பங்கு அளிப்பதாக டேரியஸ் கூறியிருந்தாலும், டேரியஸ் சரணடையவேண்டும் என்று கூறிவிட்டார் அலெக்சாண்டர். டேரியசின் பிரமாண்டமான படையை, அலெக்சாண்டரே நேரடியாகத் தலைமையேற்று நடத்திய மாசிடோனியக் குதிரைப்படை உடைத்து, உட்புகுந்து தாக்கியதில் டேரியஸ் தப்பிச்செல்ல, அவரது  படைகளும் சிதறின. சுமார் ஆயிரம் வீரர்களை அலெக்சா ண்டரின் படை இழக்க, டேரியசின் படையில் 40-90 ஆயிரம் வீரர்கள் பலியாகி, சுமார் 3 லட்சம் வீரர்கள் பிடிபட்டனர். மீண்டும் படைதிரட்டி அலெக்சாண்டரை எதிர்க்கும் நோக்கத்துடன் பயணித்த டேரியசை, அவரது மாநில ஆளுநர்களில் ஒருவரான பெசஸ் என்பவரே கொலை செய்தார். தன் மரியாதைக்குரிய எதிரியான டேரியசின் உடலை, முறைப்படி அடக்கம் செய்ததுடன், பெசசுக்கு மரணதண்டனையும் அளித்தார் அலெக்சாண்டர்.

;