tamilnadu

img

இந்நாள் மே 22 இதற்கு முன்னால்

1545 – சூரி மரபையும், சூர் பேரரசையும் தோற்றுவித்தவரும், ரூபாய் என்ற நாணயத்தை உருவாக்கியவருமான ஷெர்-ஷா சூரி, எதிரிகளின் கோட்டையைத் தகர்க்க அவர் வைத்த குண்டுகளின் வெடிப்பில் சிக்கி இறந்தார். (தற்போது மத்தியப்பிரதேசத்தி லுள்ள) பந்தேல்கண்ட் என்ற இடத்தில், சந்தே லர்கள் என்னும் ராஜபுத்திர மரபினரின் காலிஞ்சார் கோட்டையைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், வெடிமருந்தைப் பயன்படுத்தித் தகர்க்க ஷெர்-ஷா உத்தரவிட்டார். வடமொழியில், காலத்தை அழிக்கக்கூடியது என்ற பொருளுடைய பெயரைக் கொண்ட அக்கோட்டையை தகர்க்கும் முயற்சியில் ஷெர்-ஷாவே பலியானார். ஃபரீத் கான் என்ற இயற்பெயருடைய ஷெர்-ஷா ஓர் ஆஃப்கானியர். சாதாரண வீரராகச் சேர்ந்த இவர், தளபதியாகி, பீகாரின் ஆளுனராக பாபரால் நியமிக்கப்பட்டார். பாபரின் மறைவுக்குப்பின் (தற்போதைய ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியிலிருந்து, பங்களாதேஷ்வரை) கிட்டத்தட்ட முழு முகலாயப் பேரரசையுமே இவரிடம் இழந்த ஹுமாயூன், வெறும் 40 வீரர்களுடன் பாரசீகத்துக்குத் தப்பிச்செல்ல நேரிட்டது. மிகச்சிறந்த நிர்வாகியான ஷெர்-ஷா, பல குறிப்பிடத்தக்க நிர்வாக முறைகளை உருவாக்கினார். தொடர்(ரிலே) குதிரைகளின் மூலமான அஞ்சல் சேவையை நாடு முழுவதும் ஏற்படுத்தினார். வங்கத்தின் சிட்டகாங்கிலிருந்து, ஆஃப்கானிஸ்தானின் காபூல் வரையான பண்டைய பாதையை, சுமார் 2,400 கி.மீ.க்கு கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயரில் சிறந்த சாலையாக அமைத்த இவர், பயணிகள் ஓய்வெடுக்க நிழல்தரும் மரங்கள், குடிநீருக்கு கிணறுகள் ஆகியவற்றையும் வழியெங்கும் அமைத்தார்.

ரூப்யா என்ற பெயரில் ஏற்கெனவே தங்கம், வெள்ளி என்று எல்லா உலோக நாணயங்களும் இருந்ததை மாற்றி, 178 மணிகள் எடையுடைய வெள்ளி நாணயத்தை ரூபாய் என்ற பெயரில் இவர் சீர்தரப்படுத்தியதே, முகலாயப் பேரரசாலும் பயன்படுத்தப்பட்டு, இன்று, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மொரீஷியஸ், இந்தோனேஷியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பயன் படுத்தப்படும் ரூபாயாகியது. பைசா என்னும் செப்பு நாணயங்களையும் இவர்தான் வெளியிட்டார். எதிர்பாராமல் ஷெர்-ஷா மறைந்தபின், ஆட்சிக்குவந்த இஸ்லாம்-ஷா சூரியும் 1554இல் மறைந்தபின், அடுத்தடுத்து வந்த அரசர்களால் ஏற்பட்ட நிலையற்ற சூழலைப் பயன்படுத்தி ஹுமாயூன் மீண்டும் கைப்பற்றினாலும், 17 ஆண்டுகள்கூட நீடிக்காத சூர் பேரரசின் காலத்தில், மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியையும், நிர்வாகச் சீர்திருத்தங்களையும் இப்பகுதி அடைந்தது.

அறிவுக்கடல்

;