tamilnadu

img

இந்நாள் மே 22 இதற்கு முன்னால்

1455 - இங்கிலாந்தில் ரோஜாப் போர்கள் தொடங்கின. இங்கிலாந்தின் அரசுரிமைக்காக, பிளாண்டாஜெனட் அரச மரபின் பிரிவுகளிடையே 1455இலிருந்து, 1487வரை நடைபெற்ற போர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. போரில் ஈடுபட்ட லங்காஸ்டர் அரச மரபினர் சிவப்பு ரோஜாச் சின்னத்தையும், யார்க் அரச மரபினர் வெள்ளை ரோஜாச் சின்னத்தையும் கொண்டிருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. உண்மையில், வால்ட்டர் ஸ்காட் 1829இல் எழுதிய ஆன் ஆஃப் கெயர்ஸ்டீன் என்ற நாவலுக்குப் பின்னரே, ரோஜாப் போர்கள் என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. யார்க்கிஸ்ட்டுகள் தொடக்கத்திலிருந்து வெள்ளை ரோஜாச் சின்னத்தைப் பயன்படுத்திவந்தாலும், லங்காஸ்ட்டிரியர்கள் 1485இல்தான் சிவப்பு ரோஜாச் சின்னத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அரச குடும்பத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அரசுரிமை கோரலாம் என்றிருந்த நிலை, ஆட்சியிலிருக்கும் அரசரின் மகன்கள், சகோதரர்களுக்கு மட்டுமே அரசுரிமை என்று, 9ஆம் நூற்றாண்டில், ஆல்பிரெட் அரசரால் மாற்றப்பட்டது. பெண்வழி வாரிசுகளுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டதால் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டாலும், 1377இல் மூன்றாம் எட்வர்ட் அரசர் இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசுரிமை மாற்றங்களே இப்போர்களுக்கு அடிப்படையாயின. 1453இல்தான் முடிவுக்குவந்த நூறாண்டுப் போரினால் ஏற்பட்டிருந்த சமூக, பொருளாதார சிக்கல்கள், நிலவுடைமை முறையினுள்ளேயே ஏற்பட்டிருந்த சிக்கல்கள், மூன்றாம் எட்வர்டைத் தொடர்ந்து அடுத்தடுத்த குழப்பமான வாரிசுகளின் ஆட்சிக்குப்பின் ஆண்டுகொண்டிருந்த ஆறாம் ஹென்றியின் பலவீனமான ஆட்சி ஆகியவற்றால், யார்க்கின் ரிச்சர்டு அரசுரிமைகோரியதைத் தொடர்ந்து போராகியது. ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகியவை லங்காஸ்ட்டிரியர்களுக்கு உதவி, வெற்றிபெறச்செய்தாலும், இப்போர்களின் இறுதியில் இரு மரபிலும் ஆண்வழி வாரிசுகள் அழிந்திருந்தனர். போரில் உதவிய, வேல்சின் ட்யூடார் மரபிலிருந்த, லங்காஸ்டிரியர்களின் பெண்வழி வாரிசான ஏழாம் ஹென்றி அரசரானதைத் தொடர்ந்து, பிளாண்டாஜெனட் மரபின் ஆட்சி முடிவுக்குவந்து, ட்யூடார் மரபின் ஆட்சி தொடங்கியது. போரில் அரச குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளால் பிரபுக்களின் நிலவுடைமை பலவீனமடைந்து, வணிக வர்க்கம் வலுப்பெற்றது. இப்போரின் முடிவு இங்கிலாந்தின் மறுமலர்ச்சிக்காலத்தின் தொடக்கமாகவும் குறிப்பிடப்படுகிறது.அறிவுக்கடல்

;