tamilnadu

img

இந்நாள் மார்ச் 19 இதற்கு முன்னால்

1687 - ‘லா சால்’ என்று பொதுவாக அறியப் பட்டுள்ள, பிரெஞ்ச் வணிகரும்,பயணி யுமான ‘ரெனி ராபர்ட் கேவலியே, சியூர் டி லா சால்’, அவருடைய குழுவினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ‘சியூர் டி லா சால்’ என்பதற்கு பெரிய வீட்டின் பிரபு என்பது பொருள். இயேசு சபை பாதிரியாராக 1660இல் பதிவு செய்துகொண்ட இவர், 1667 தனக்கு தார்மீக பலவீனங்கள் இருப்ப தாகக்கூறி, தானே விலகிக்கொண்டார்.வடஅமெரிக்காவில் 1670, 1679-82, 1684-87 ஆண்டுகளில் பயணங்கள் மேற்கொண்ட இவர், முழுமிசிசிப்பி ஆற்றுப் படுகையையும் பிரான்சுக்குச் சொந்தம்கொண்டாடி, பதினான்காம் லூயி பேரரசரின் பெயரையேலூசியானா(லூயிசியானா) என்று சூட்டினார்.

இப்பகுதியின் முக்கியத்துவத்தை பேரரசர் உணராத நிலையில், ஸ்பானியப் பேரரசு அப்பகுதியில் விரிவாக்கம் செய்வதைத் தடுக்கவேண்டிய அவசியத்தை பேரரசருக்குப் புரிய வைத்த இவர்,அப்பகுதியில் குடியேற்றம் அமைப்பதற்கான உத்த ரவை 1684இல் பெற்றார். மிசிசிப்பி ஆற்றின் முகத்துவாரத்தைத் தேடி 1684இல் நான்கு கப்பல்களில் 360 பேருடன் புறப்பட்டார். சரியான வழி தெரியவில்லையென்பதுடன், யாருடைய அறிவுரையையும் மதிக்காதவராகவும் இருந்தார். அட்லாண்ட்டிக்கைக் கடக்கும் நீண்ட பய ணத்திற்குமுன், ஆஃப்ரிக்காவுக்கு மேற்குப் பகுதியிலிருந்த மெடெய்ரா-வில் நிறுத்தி குடிநீர் முதலானவற்றை நிரப்பிக் கொள்ளவேண்டுமென்று மற்றவர்கள் கூறியதை இவர் ஏற்காத தால், கடுமையான வெப்பத்தில், போதுமான குடிநீரின்றி தவிக்க நேரிட்டது.

மற்றவர்கள் கூறியதை ஏற்காமல், இரவு,பனிமூட்டம் ஆகியவற்றிற்கிடையே தொடர்ந்து பயணிக்க இவர் உத்தர விட்டதில், மிசிசிப்பியைத் தவறவிட்டு, (தற்போதைய) டெக்சாசிலுள்ள மடகோர்டா குடாவை வந்தடைந்தனர். இடையில் ஒரு கப்பலை கொள்ளை யர்கள் கைப்பற்றிக்கொள்ள, ஒன்று மூழ்கிப்போக, இவருடனான முரண்பாடுகளால் ஒன்று திரும்பிச் செல்ல, இருந்த ஒரே கப்பலும் 1687 பிப்ரவரியில் தரைதட்டியது. எங்கு செல்கிறோம் என்று தெரியாத அலைச்சலிலும், இவருடைய முரட்டு நடவடிக்கைகளிலும் வெறுப்புற்றி ருந்த நண்பர்களே இவரைச் சுட்டுக் கொன்றனர். ஆனாலும், இவரது பயணங்கள் பிரான்சின் வடஅமெரிக்கப் பகுதிகளை மிகப்பெரிய அளவில் விரிவாக்கின என்பதும், அப்பகுதிகளில் இவர் அமைத்த கோட்டைகள், அடுத்த நூறாண்டுகளுக்கு, முக்கிய வணிக மையங்க ளாக விளங்கின என்பதும் இவரை இன்றும் நினைவுகூரச் செய்கின்றன.

- அறிவுக்கடல்

;