tamilnadu

img

இந்நாள் பிப். 20 இதற்கு முன்னால்

1971 - அமெரிக்க அரசின், ‘அவசரகால ஒலிபரப்பு அமைப்பு(இபிஸ்)’, தவறு தலாக அபாய சமிக்ஞையை ஒலிபரப்பியது. முத்துத் துறைமுகத் தாக்குதல்தான், அவசரகால ஒலிபரப்பின் தேவையை அமெரிக்காவுக்கு உணர்த்தியது. சோவியத்துடன் போர் மூளலாம் என்ற பதற்றம் நிலவிய காலத்தில், தாக்குதலின்போது உடனடியாக அமெரிக்க மக்களுக்கு அறிவிப்பதற்காக, ‘மின்காந்தக் கதிர்வீச்சுக் கட்டுப்பாடு(கோனல்ராட்)’ என்ற அமைப்பு 1951இல் தொடங்கப்பட்டது. அவசரகாலங்களில், ஒலிபரப்பு குறிப்பிட்ட அலைவரிசைகளுக்கு மாற்றப்படுவதுடன், தாக்க வரும் விமானங்களைக் குழப்புவதற்காக, மாற்றிமாற்றி ஒலிபரப்பவும் செய்தது இந்த கோனல்ராட். ஆனால், கண்டங்கடந்து தாக்கும் ஏவுகணைகள் வந்தபின், குண்டுவீச்சு விமானங்களைத் திசைதிருப்புவதெல்லாம் பொருளற்றதான நிலையில், 1963இல் தொலைக்காட்சி, வானொலி ஒளி, ஒலி பரப்புகளை இடைமறித்து ஒளி, ஒலி பரப்பும் இந்த இபிஎஸ் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு செயல்பாட்டிலுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக வாரந்தோறும் செய்யப்படும் சோதனை ஒளிபரப்பின்போது, தவறுதலாக ஆபத்துச் செய்தி ஒளிபரப்பானது. அதைச் சரிசெய்ய 40 நிமிடங்களுக்கும் அதிகமாக ஆனது, அந்த அமைப்பிலுள்ள குறைபாடுகளை உணர்த்தியதால், அடுத்த 20 மாதங்களுக்கு இந்த அமைப்பே முடக்கிவைக்கப்பட்டது. உண்மையில், 1955இலும், 1959இலும் கோனல்ராட் அமைப்பில் தவறான அவசர சமிக்ஞை ஒலிபரப்பானதும், அதை மாற்றக் காரணமாக இருந்தது. இந்த இரு அமைப்புகளிலும் இல்லாத, அனைத்து வானொலி, தொலைக்காட்சி ஒளி(லி)பரப்புகளிலும், பத்தே நிமிடங்களுக்குள், அமெரிக்கக் குடியரசுத் தலைவரே நேரடியாக உரையாற்றும் வசதியுடன், 1997இல் அவசரகால எச்சரிக்கை அமைப்பு(இஏஎஸ்) அமைப்பு நடைமுறைக்கு வந்தது. ஆபத்துக் காலங்களில், அமெரிக்காவின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் குடியரசுத்தலைவர் பேசுவதை, பல ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம்.

அவ்வாறு, அனைத்துத் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களிலும் அரசின் செய்தியை உடனடியாக ஒளி(லி) பரப்பச் செய்வதற்கான அமைப்பு இதுதான். 2006இல் முழுமையான எச்சரிக்கை அமைப்பிற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அனைத்து ஒளி, ஒலிபரப்பு நிலையங்களும், இஏஎஸ் அமைப்புக்கு இசைவான டிஜிட்டல் கருவிகளுக்கு மாறவேண்டும் என்றும் 2007இல் உத்தரவிடப்பட்டது. 180 நாட்களுக்குள் மாறவேண்டும் என்ற இந்த உத்தரவு, 2012வரை பலமுறை நீட்டிக்கப்பட்டது தனிக்கதை! 

- அறிவுக்கடல்

;