tamilnadu

img

இந்நாள் பிப். 13 இதற்கு முன்னால்

1912 - ஒருவரின் மறைவுக்காக மவுனம் கடைப்பிடிப்பது, உலகிலேயே முதன்முறை யாக போர்ச்சுகீசிய ஆட்சிமன்றத்தில் செய்யப்பட்டது. பிரேசிலிய அயலுறவின் தந்தை எனப்படும், பிரேசிலின் வெளியுறவு அமைச்சரான ஜோஸ் பரானோஸ், பிப்ரவரி 10இல் இறந்ததற்காக, பிப்ரவரி 13இல் கூடிய ஆட்சி மன்றம் 10 நிமிடங்கள் மவுனம் கடைப்பிடித்தது. பேராசிரியர், புவியியலாளர், வரலாற்றாசிரியர் உள்ளிட்ட பன்முகம் கொண்ட இவர், போர்ச்சுகீசிய ஆட்சியிலிருந்து, விடுதலைபெற்ற பிரேசில், குடியரசாவதற்குச் சில நாட்கள் முன்னதாக, பேரரசர் இரண்டாம் பெட்ரோ வழங்கிய ‘ரியோ பிராங்கோவின் பிரபு’ என்ற பட்டத்தாலேயே அறியப்படுகிறார். அவ்வாண்டிலேயே, ஏப்ரலில் டைட்டானிக் கப்பல் மூழ்கி, சுமார் 1,500 பேர் உயிரிழந்தபோது, அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இந்த மவுனம் கடைப்பிடிப்பது பரவியது.

தென்ஆப்ரிக்காவின், கேப்டவுன் நகர மேயரான ஹாரி ஹேண்ட்ஸ் என்ற ஆங்கிலேயர், அவர் மகன் ரெஜினால்ட் ஹேண்ட்ஸ், முதல் உலகப்போரில் பங்கேற்று, 1918 ஏப்ரல் 20இல் பிரான்சில் போர்முனையில் பலியானதைத் தொடர்ந்து, போரில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 1918 மே 14லிருந்து, ஆண்டு முழுவதும், நண்பகல் பீரங்கி ஒலிப்பைத் தொடர்ந்த இரண்டு நிமிடங்களுக்கு மவுனம் கடைப்பிடிக்க உத்தரவிட்டார். இது 1919 ஜனவரி 17உடன் நின்றுபோனாலும், மீண்டும் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. நண்பகல் பீரங்கி ஒலிப்பு என்பது, டச்சுக்காரர்களிடமிருந்து கேப்டவுனை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியபின், நண்பகல் 12 மணிக்கு, நேரத்தைக் குறிப்பதற்காக (மணி, சங்கு போன்று) 1806இலிருந்து பீரங்கியை ஒருமுறை வெடிக்கும் நடைமுறையாகும்.

இது இன்றுவரை (விடுமுறை நாட்கள் தவிர்த்து) தொடர்கிறது. மூன்று நிமிடங்கள் கடைப்பிடிக்க மேயர் உத்தரவிட்டிருந்தது, மே 13இல் முயற்சிக்கப்பட்டபோது, நீண்ட நேரமாகத் தோன்றியதால், இரண்டு நிமிடங்களாக மாற்றப்பட்டது. 1916இலிருந்தே, கேப்டவுனின் சில தேவாலயங்கள் அவ்வப்போது, இந்த மவுனம் கடைப்பிடிப்பதைச் செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. 1918இல் முதல் உலகப்போரின் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நேரமான நவம்பர் 11, காலை 11 மணிக்கு, இரண்டு நிமிட மவுனம் கடைப்பிடிப்பது, 1919இலிருந்து இங்கிலாந்திலும், காமன்வெல்த் நாடுகளிலும் செய்யப்படுகிறது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30, இந்தியாவில் தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு, காலை 11 மணிக்கு இரண்டு நிமிட மவுனம் கடைப்பிடிக்கப்படுகிறது.

- அறிவுக்கடல்

;