tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால்

1865 - பன்னாட்டுத் தந்தி ஒன்றியம், பாரிசில் நடைபெற்ற பன்னாட்டு தந்தி மாநாட்டில் உருவாக்கப்பட்டது. உலக நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அமைப்புகளில் மிகப்பழையவற்றில் இதுவும் ஒன்று. 1906இல் நடைபெற்ற பன்னாட்டு கம்பியில்லாத்தந்தி மாநாட்டில், பன்னாட்டு கம்பியில்லாத்தந்தி ஒன்றியம் என்பது அதிகாரப்பூர்வமில்லாமல் உருவாக்கப்பட்டது. 1932இல் இவையிரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு, தற்போதைய பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியமாக (ஐடியு) மாற்றியமைக்கப்பட்டது. 1947இல் ஐநாவின் சிறப்பு முகமைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களுக்குப் பொறுப்பாக உள்ளது. ஐநாவின் மிகப்பழைமையான 15 சிறப்பு முகமைகளில் இதுவும் ஒன்று. ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் தலைமையகத்தைக்கொண்ட இதற்கு, 12 பகுதி அலுவலகங்கள் உள்ளன. அரசுகளுக்கிடையேயான பொது, தனியார் கூட்டுச் செயல்பாட்டு அமைப்பான இதில் 193 நாடுகளுடன், 800 பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை துறைசார்ந்த உறுப்பினர்களாக இருந்து, அந்தத் துறைகளின் பணிகளை மேற்கொள்கின்றன. அலைக்கற்றையினை உலகநாடுகள் பகிர்ந்துகொண்டு பயன்படுத்துதலை இது நெறிப்படுத்துவதுடன், செயற்கைக்கோள்களுக்கான சுற்றுப்பாதைகளை ஒதுக்கீடு செய்வதில் பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்கும் பணியையும் மேற்கொள்கிறது. வளரும் நாடுகளில் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்நுட்பங்களின் சீர்தரங்களை(ஸ்டாண்டர்ட்) நிர்ணயிப்பதில் உலக நாடுகளிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவது ஆகியவற்றையும் இது செய்கிறது. தரைவழித் தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, புதிய தலைமுறை கம்பியில்லாத் தொழில்நுட்பங்கள், செயற்கைக்கோள் மூலமான வானிலை கணிப்பு, அடுத்த தலைமுறை நெட்வொர்க்குகள் முதலானவற்றின் சீர்தரத்தை நிர்ணயிக்கும் பணியையும் இதுவே செய்கிறது. பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் மூன்று முக்கிய பிரிவுகளாகச் செயல்படுகிறது. பன்னாட்டு வானொலி ஆலோகனைக்குழு என்ற பெயரில் 1927இல் உருவாக்கப்பட்டு, 1992இல் ஐடியு-ஆர் ஆக மாற்றப்பட்ட, கம்பியில்லாத் தொலைத்தொடர்புக்கான பிரிவு, அலைக்கற்றை, செயற்கைக்கோள் சுற்றுப்பாதை முதலானவற்றைத் தீர்மானிக்கிறது. தொலைபேசி, தந்தி ஆலோசனைக்குழுவாக 1956இல் உருவாக்கப்பட்டு, 1993இல் மாற்றியமைக்கப்பட்ட ஐடியு-டீ, தொலைத்தொடர்புத்துறையின் சீர்தரங்களை நிர்ணயிக்கிறது. 1992ல் உருவாக்கப்பட்ட ஐடியு-டி, தொழில்நுட்பங்களின் பரவலாக்கத்தைக் கவனிக்கிறது.

அறிவுக்கடல்

;