tamilnadu

img

அமேசான் - ஒரு பெருவனத்தின் கூக்குரல்

 

பூமியின் அத்தனை வளங்களையும் பேராசை பெரும் பசியினால் தின்று  தீர்த்துவிட்டு,  நிலவில் நீரையும் செவ்வாயில் வேரையும் தேடும் மனிதர்கள் அபாயகரமானவர்கள்.

இரண்டு விதமான மனிதர்கள் மட்டுமே இங்கு இருக்கிறார்கள்.ஒன்று வயிறு எரிந்து சாகும் கூட்டம், இன்னொன்று வனம் எரித்து சாகும் கூட்டம்.


உலகப் பெரும் பிண்டத்தின் ஒற்றை நுரையீரலான அமேசான் எரிந்து கொண்டிருக்கிறது. 

இப்படியாக செயற்கையின் இடர்களை வலிந்து வரவழைத்துவிட்டு இயற்கை பேரிடர் என்று வானிலை அறிக்கை சொல்வது அபத்தம்.

"நமக்கு தெரிந்ததெல்லாம்
கார்டுகளைப் பற்றிதான் 
காடுகளைப்பற்றி?"


பள்ளிகளில் மரத்தை படமாக வரைந்துதான் ஒரு குடும்பத்தை விளக்குவார்கள்.இப்போதும் அந்த மரங்களை காட்டில் இல்லை, நோட்டில்  மட்டுமே இருக்கிறது.

"மூர்ச்சையாகி கிடக்கிறான்
மூச்சுக்குழல் நண்பன்"


தண்ணீரைக் காசுகொடுத்து வாங்கும் மனித கோமாளிகள்,காற்றையும் காசுகொடுத்து வாங்க தயாராகிவிட்டார்கள்.

"மாதாந்திர
மளிகைப்பட்டியலை
ஆக்கிரமிக்கிறது
ஆக்ஸிஜன் சிலிண்டர்"

இலவசமாக கிடைக்கும் பஞ்சபூதங்களை மானுடபிசாசுகள் காசுகொடுத்து வாங்குவது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

மனிதர்கள் மரணித்தால்
மரங்களால் கொள்ளிவைப்பார்கள்
மரங்களின் மரணத்திற்கு
மனிதர்களே கொள்ளிவைத்தார்கள்"

இந்த ஈனர்களைப் பார்த்தால் ''கட்டியிலெ போக' என்று சபிப்பதற்குக்கூட இப்போது மரங்களில்லை என்பதுதான் விழிபிதுங்கும் சோகம்.

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
பழமொழி எழுதிய
மானுடப் பதர்களை
காற்று தூற்றித்தீர்க்கிறது"


இயற்கைத்தாயின் மார்பகத்தில் பால் அருந்தலாம்.பெரும்பசி எடுத்து மார்பகத்தையே தின்பவன் எத்தனை குரூரன்.

"நாம்
மரத்துப்போனதால்
மறந்துபோனதால்
மரமும் போனது"

"வெள்ளத்தின் கண்ணீர்
வடிவதற்குள்
நெருப்பின் காயம்
அய்யகோ!!!"

இயற்கையின் செழுமைகளை வாழ்வியல் கிள்ளியெடுத்தது, அறிவியல்தான்   அள்ளியெடுக்கிறது.

"நேற்று
பஞ்சபூதங்கள் இருந்தன
,இன்று
பஞ்சத்தில் பூதங்கள் இருக்கின்றன"

அன்று நம் வறுமையின் நிறம் சிவப்பு.இன்று நம் நிழல்களின் நிறம் கூட சிவப்பே.

"சந்தனக் காடுகள்
சாம்பல் காடுகளானதால்
மூங்கில் காடுகள்
முகாரியில் தேம்புகின்றன"

இன்று சஞ்சீவிமலைகளும் இல்லை.அனுமன்களும் இல்லை.நோய்வாய்ப்பட்ட இராமன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

"நேற்று
கனிகளை கொள்ளையடித்த
சோலையில்/இன்று
கனிமக்கொள்ளை"

"நேற்று
மூலிகைகளை
கிள்ளிவைத்தோம்
இன்று
மூலங்களுக்கே
கொள்ளிவைத்தோம்"

"ஈரம் பிசைந்த
நிலத்தின்
உலராத மரங்களை
உடன்கட்டை ஏற்றியது/யார்?"

"காடுகளும் எரிந்து
கூடுகளும் எரிந்ததால்
ஆகாயம் சிறகுகளையும்
பூமி சருகுகளையும்
இழந்து 
அனாதையானது பிரபஞ்சம்"

மரம் எத்தனை உயிரினங்களின் ஒற்றை இல்லம்.அவை அக்கினியைத் தின்று வீடுபேரடைந்துவிட்டன.

பூமிக்கிரகம் பூமியிலிருந்தே அகதியாகிறது.

"கார்பனைச் செறிப்பதற்கு
இரைப்பைகளும் இல்லை
ஆக்ஸிஜனைப் பிரசவிப்பதற்கு
கருப்பைகளும் இல்லை"

"எரிந்த பெருங்காட்டில்
நிறைந்திருக்கின்றன
காய்களின் சுவடுகளல்ல
காயங்களின் சுவடுகள்"

"பழங்களின் எண்ணிக்கை
அதிகமிருந்த காட்டில்
பலிகளின் எண்ணிக்கையே
அதிகமாகிவிட்டன"


ஒரு வனத்தையே மயானத்திற்கு அழைத்துச்சென்ற துரோகம் தான் இந்த யுகத்தின் கடைசிமரணநொடி.


"புழுதியையும்
சாம்பலையும்
பிசைந்துசெய்த
திருநீற்றை
காயமெங்கும் பூசி
சமாதியடைந்தது
பெருவனம்"


"குறுக்கும் நெடுக்குமாக
பெருமூச்சிறைக்க ஓடி
துதிக்கையில் நீர்ப்பீய்ச்சிய
பெருந்தெய்வக்கூட்டத்தின்
பிளிறல் பேரொலி
வனமெங்கும் இன்னமும்
கேட்கிறது"


"தகிக்கும் வெப்பத்தில்
முட்டைகள் உடைந்து
கிளைகளில் வழிந்த
மாமீச திரவத்தின் நாற்றம்
மூச்சுக்குழலுக்குள்
இன்னமும் மூர்க்கம் விளைக்கிறது"


"எரிந்து முறிந்த
கிளைகள்
வானத்திலும்
உலர்ந்து கருகியவேர்கள்
மண்ணிலும்
எழுதிமுடித்தன
மரணவாக்குமூலங்களை"

"இது
அந்திமக்காலத்தின்
கடைசி அத்தியாயம்"


"தீப்பிடித்த தோகைகளிலிருந்து
எரிநச்சத்திரங்களாய் உதிர்ந்த
நெருப்பின் பிழம்புகள்
அனல்வாதம் செய்கின்றன

"அகவல்கள் ஒலித்த 
சோலைகள்தோறும்கேட்கின்றன
மயில்களின் அலறல்கள்"

" கூவல்கள் ஒலித்த
சோலைகள்தோறும் கேட்கின்றன
குயில்களின் கதறல்கள்"


"முற்றிய மூங்கில்
வெப்பக்கரு தாங்காமல்
குறைபிரசவமாய் வெடித்து
பூமிக்கு
மேலிருந்தபடியே
வாய்க்கரிசியைப் போடுகிறது"


"எதைக்கேட்டாலும்
அமேசானில் வாங்கலாம்
அமேசானில்
அமேசானை வாங்க முடியாது"


இத்தனையும் நடந்து முடிந்தபிறகும்,மண்ணின் மீதான மனித வன்மம் நீள்கிறது.

வனங்களையெல்லாம் தீயின் வாயில் தின்னக்கொடுத்துவிட்டு வீட்டின் முற்றத்தில் குரோட்டன் வளர்ப்பனும், வரவேற்பறையில் மணி பிளேண்ட் வளர்ப்பவனும் சூழலியலின் முதல்குற்றவாளி.

கிளைகளை எல்லாம் கிள்ளி எறிந்துவிட்டு பட்சிகளுக்கு வீடுகளில் கூடுகள் கட்டுபவன் கேடுகெட்டவன்.


ஈர பூமியைக் காய்ச்சலின்  படுக்கையில் கிடத்திவைத்துவிட்டு குளிர்பதன அறைக்குள் ஒளிந்துகொள்பவன் தண்டனைக்குரியவன்.


அணுக்கழிவு ஆலகாலத்தை ஆழ்கடலில் கலந்துவிட்டு கண்ணாடித் தொட்டியில் மீன்கள் வளர்ப்பவன் ஈனன்.


செயற்கை கோள் குப்பைகளை வானவீதிகளில் நிரப்பிவைத்துவிட்டு தெருவைக்கூட்டுபவன் குருட்டுப்பேயன்.


பூச்சிக் கொல்லிகளால் பூமியை கொன்றுவிட்டு மனித அசுரர்களுக்காக கருப்பை சுமப்பவன் கொலைபாதகன்.

"அன்று/குரங்குகள்/இலங்கையை கொளுத்தியது/எரியூட்டுப்படலம்/இன்று/ மனிதர்கள்/இயற்கையை கொளுத்தியது/வெறியூட்டுப்படலம்/

சகாராக்களை இன்னும் எரியவிட்டு அண்டார்டிகாவில் அடைக்கலம் தேடுபவன் அயோக்கியன்.


இயற்கைக்கு எதையும் கொடுக்கத் தெரியாமல் ,இயற்கையிடமிருந்து எல்லாவற்றையும் பிச்சை எடுக்கத் தெரிந்த மானிட கூட்டத்தின் செவிட்டு செவிகளுக்கு அறைந்து சொல்லப்பட்ட சாவுமணிதான் அமேசானில் இன்னும் ஓயாமல் ஒலிக்கும் லட்ச உயிர்களின் கதறல் ஒலி.

கண்காட்சி சாலைகள் பறவைகளுக்கு உண்டு, விலங்குகளுக்கும் உண்டு, மரங்களுக்கும் ஒன்று வைத்துவிடுங்கள்.இல்லையேல் வரும் தலைமுறை மரங்களைப் பற்றி தெரியாமலே போய்விடும்.


தினங்களைப்பற்றியும் மனங்களைப்பற்றியும் தெரிந்துகொண்டது போதும் இனியாவது வனங்களைப்பற்றி தெரிந்து கொள்வோம்.


குடித்து கெடுபவனைவிட குடியை கெடுப்பவன் கொடியவன். இருந்தாலும் பழங்குடியை கெடுத்த  புதுக்குடி கெடுக!

வனம் வளர்ப்பவர்களுக்கும் வயிறு வளர்ப்பவர்களுக்கும் இடையில் நடந்த சூழல் போரில் இருவரில் ஒருவரை " இன்று போய் நாளை வா" என்று உயிர்ப்பிச்சை கொடுத்து அனுப்பியது் 'இயற்கை'

கட்டுரையாளர்: போ.மணிவண்ணன்,
பேராசிரியர்- சூழல் செயல்பாட்டாளர்,நீலகிரி.
9443751641.

 

;