tamilnadu

img

இந்நாள் மே 18 இதற்கு முன்னால்

1756 - சில வரலாற்றாசிரியர்களால் முதல் உலகப்போர் என்று குறிப்பிடப்படும், ஏழாண்டுப்போர் தொடங்கியது. இங்கிலாந்து, பிரஷ்யா, போர்ச்சுகல் முதலானவை ஓரணியிலும், பிரான்ஸ், ஆஸ்திரியா தலைமையிலான புனித ரோமப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, ஸ்பெயின், ஸ்வீடன் உள்ளிட்டவை எதிரணியிலும் நிற்க, உலகளாவிய போராக நடைபெற்றது. 1750களின் தொடக்கத்தில் ஒகையோ ஆற்றுப் பள்ளத்தாக்கில் பிரான்ஸ் ஒரு கோட்டையைக் கட்டத்தொடங்கியபோது, வட அமெரிக்காவிலிருந்த குடியேற்றங்களின் எல்லைகள்பற்றிய இங்கிலாந்துக்கும், பிரான்சுக்குமான முரண்பாடுகள் தீவிரமடைந்தன. பிரெஞ்ச்சுப் படைகளை வெளியேற்ற, அப்போது 22 வயது லெஃப்டினெண்ட் கர்னலாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையிலான குடிப்படை வர்ஜீனியாவிலிருந்து அனுப்பப்பட்டது. இப்படை பிரெஞ்ச்சுப் படையைத் தாக்கி, அதன் தளபதி உட்பட 10 பேரைக் கொன்றுவிட, பிரான்சின் பதில் தாக்குதலில் வாஷிங்டன் சரணடைய நேர்ந்தது. இத்தகவலறிந்ததும் இங்கிலாந்தும், பிரான்சும் ராணுவத்தை அமெரிக்காவிற்கு அனுப்பின.பிரான்சின் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்களைப் பறிமுதல் இங்கிலாந்து செய்தது, நெருக்கடியை முற்றச் செய்ய, 1956 மே 17இல் பிரான்சின்மீது அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவித்தது இங்கிலாந்து. இதற்கிடையில், ஐரோப்பாவில் பெரிய நாடுகள் அணிமாறின. ஆஸ்திரிய வாரிசுரிமைப்போரில் இங்கிலாந்து உதவியிருந்தாலும், இழப்புகளைச் சந்தித்ததால், பன்னெடுங்கால எதிரியான பிரான்சுடன் ஆஸ்திரியா சேர்ந்தது. இதைத் தொடர்ந்து எதிரியான இங்கிலாந்துடன் பிரஷ்யா அணிசேர்ந்ததுடன், உடனடியாக சேக்சனி பகுதியைக் கைப்பற்றிக்கொள்ள, ஐரோப்பாவிலும் போர் வெடித்தது. போலந்து-லிதுவேனியப் பகுதிகளை பிரஷ்யா கைப்பற்றிவிடும் என்றஞ்சி ஆஸ்திரியாவுடன் சேர்ந்த ரஷ்யா, 1762இல் அணிமாறியது தனிக்கதை. சூழ்நிலையைப் பயன்படுத்தி, முகலாயப் பேரரசு பிளவுற்றுக்கிடந்த இந்தியாவில், ஆங்கிலேயப் பகுதிகளைக் கைப்பற்ற பிரான்ஸ் செய்த முயற்சிகளே பிளாசிப்போர் உள்ளிட்ட மூன்றாம் கர்னாடகப்போர்கள். பொதுமக்கள் உட்பட 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியான இப்போரில் இங்கிலாந்து-பிரஷ்ய அணி வெற்றிபெற்றது. பிரான்ஸ் பல பகுதிகளை இழந்தது. ஐரோப்பாவில் பிரான்சின் மேலாதிக்கநிலை முடிவுக்கு வந்து, இங்கிலாந்து உலகின் முக்கிய சக்திகளுள் ஒன்றாக மாறியது.அறிவுக்கடல்

;