tamilnadu

img

யார் இந்த அபிஜித் பானர்ஜி? - பேரா.தா.சந்திரகுரு

பொருளாதாரத் துறைக்கான நோபல் என்று  அழைக்கப்படுகின்ற பொரு ளாதார  அறிவியலுக்காக ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படுகின்ற ஸ்வெரிஜஸ்  ரிக்ஸ்பேங்க்  பரிசை  இந்த ஆண்டு மைக்கேல் கிரெம்மர், அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ ஆகிய மூவரும் இணைந்து பெற்றுக் கொள்கின்றனர். அபிஜித் பானர்ஜி -  எஸ்தர் டிஃப்லோ தம்பதியர் நோபல் பரிசை வென்றெடுக்கும் ஆறாவது தம்பதியாக,  பொருளாதாரத்திற்கான பரிசை வெல்கிற இரண்டாவது தம்பதியாக இருக்கின்றனர். அமர்த்தி யா சென்னுக்குப் பிறகு  நோபல் விருது பெறுகின்ற இரண்டா வது இந்தியர் அபிஜித் பானர்ஜி.   

மும்பையில் பிறந்த 58 வயதாகும் அபிஜித் பானர்ஜி, கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் இளநிலைப் படிப்பை யும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பையும் பயின்ற மாணவர். ஹார்வர்ட் பல்கலைக்கழ கத்தில் ஆய்வு முனைவர் பட்டம் பெற்று, ஹார்வர்ட் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி புரிந்த பின் தற்போது எம்ஐடியில் சர்வதேசப் பேராசிரி யராகப் பணி புரிந்து வருகிறார். அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்தின் (J-PAL – ஜே-பால்) நிறுவனர் மற்றும் இயக்குநராகவும்  இருக்கிறார்.

நோபல் பரிசு பெற்றிருக்கும் பொருளாதார வல்லுனர்க ளான  அபிஜித்  பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ ஆகியோர் பல ஆண்டுகளாகவே நரேந்திர மோடி அரசாங்கத்தின் பொரு ளாதாரக் கொள்கைகளை வெளிப்படையாகவே விமர்சித்து வந்திருக்கின்றனர்.  பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி துவங்கி மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வ  புள்ளிவிவரத் தரவு களை கையாண்ட விதம் வரையிலும் தங்களுடைய ஆட்சே பணைகளை அவர்கள் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ள னர். சில நாட்களுக்கு முன்பு, பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் தேசிய ஜனநாயக முன்னணி-2 அரசு அனைத்தையும் மையப்படுத்துகின்ற முடிவுகளை எடுத்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்த அபிஜித் பானர்ஜி, பிரதமர் அலுவலகம் தொழில்சார்ந்த வல்லுநர்களால் எடுக்கப்படுகின்ற முடிவுகளில்  தலையிடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, பொது வாக இந்திய நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறியிருந்தார்.

நோபல் பரிசை வென்ற பிறகு தொலைக்காட்சி சேனல்க ளுக்கு அளித்த பேட்டியில், தற்போது இந்தியாவின் பொருளா தார நிலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், நிலையான வளர்ச்சி குறித்து அளிக்கப்பட்டிருந்த உறுதி  காணாமல் போய் விட்டதாகவும் கூறியுள்ளார். கணவன், மனைவி என்று இந்த தம்பதியர் இருவருமே பிரதமராக தன்னுடைய முதல் பதவிக்காலத்தின் போது அறிவிக்கப்பட்ட மோடி பாணி நடவடிக்கையான பணமதிப்பு நீக்க அறிவிப்பை கடுமையாக விமர்சித்திருந்தனர். 2017 ஆம் ஆண்டு தி வயர் இணைய இதழுக்கு அளித்திருந்த பேட்டி யில், இந்த அரசாங்கம் செய்திருக்கும் மிக விசித்திரமான விஷயங்களில் பணமதிப்பு நீக்கமும் ஒன்றாக இருக்கிறது என்ற பானர்ஜி “இந்த நடவடிக்கையில் எந்தவொரு பொரு ளாதாரமும் இருப்பதாக நான் கருதவில்லை. மிகச் சிறந்த நடவடிக்கை என்று இதைச் சொல்வதற்கான காரணம் எதுவும் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக டுஃப்லோவும் கருத்து தெரிவித்திருந்தார். “அறிவிப்பதற்கு முன்பாகவே நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தாமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  பணமதிப்பு நீக்க அறிவிப்பின் மூலம் முறைசாரா பொரு ளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தை இந்தியா ஒருபோ தும் அறியப் போவதில்லை என்றும், மோடி அரசாங்கம் தனது சொந்த நலனுக்காக வேண்டுமென்றால் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்   என்றும்  2016  டிசம்பரில் அவர் கூறியிருந்தார். “இதுவரை அது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஒருவேளை எப்போதுமே அறிந்து கொள்ள முடியாமலேகூட போய் விடலாம். முறைசாராப் பொருளா தாரத்தின் மூலம் உருவாகின்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதற்கென்று பயனுள்ள எந்தவொரு வழிமுறையும்  இல்லை என்பதே  இதற்குக் காரணம் ... இழப்பு குறித்து சரியான அளவை  ஒருபோதும்  நம்மால் அறிய முடியாது என்பதால், மிக மோசமான பின்னடைவு எதுவும் நடைபெறவில்லை என்று வாதிடுவதற்கு அரசாங்கம் இந்த புள்ளிவிவரங்களையே பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டுமானப் பணி நடக்கின்ற இடங்களிலிருந்து தங்கள் கிராமங்களுக்குத் தொழிலாளர்கள் திரும்புவதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் குறுகிய கால துயரங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலான தரவுகள் எதுவும் கைவசமில்லை” என்று அவர்  அப்போது கூறியிருந்தார்.

2018ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்திய பொரு ளாதாரம் குறித்து அறிக்கையை எழுதிய 13 பொருளா தார வல்லுனர்களில் பானர்ஜியும் ஒருவர். நலத்திட்டங்க ளுக்கான செலவினங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும், தெளிவாகப் புலப்படுகின்ற முதலீட்டு இடைவெளிகளை நிரப்ப வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தர வாதச் சட்டத்தின் கீழ் ஊதியத்தை உயர்த்துவது, பண்ணை வருமானத்தை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் மக்களின் கைகளில் பணம் இருக்கும் வகையில் அர சாங்கம் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று சமீபத்தில் பானர்ஜி கூறியிருந்தார்.

2019 மார்ச் மாதத்தில், 108 கல்வியாளர்களுடன் இணைந்து இந்தியாவின் புள்ளிவிவர தரவுகளில் அரசியல் தலையீடு இருப்பதாக விமர்சித்து எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்றில் பானர்ஜி மற்றும் டுஃப்லோ இருவரும் கையெ ழுத்திட்டிருந்தனர். அந்தக் கடிதத்தில், “இந்திய புள்ளி விவரங்கள்  மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது செல்வாக்கு செலுத்தப்படுவதாகவும், அரசியல் கருத்துக்க ளால் அவை கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவற்றின் மீது சந்தேக மேகம் சமீபத்தில் எழுந்துள்ளது” என்று அந்த  கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்த கவலைகள் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் நிராகரிக்கப்பட்டது மட்டுமல்லாது, இவர்கள் அனைவரையும் “பொருளாதார வல்லுநர்கள் என்று கூறப்படுபவர்கள்” என்றும் “நிர்ப்பந்தமான முரண்பாடுகள் கொண்டவர்கள்” என்றும் அவர் அழைத்திருந்தார்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, குறைந்த பட்ச வருமான உத்தரவாதத் திட்டத்தை கொண்டு  வருவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உதவ  பானர்ஜி ஒப்புக் கொண்டதை யடுத்து, ஆளும் கட்சி ஆதரவாளர்களால்  பானர்ஜி  கடுமை யாக விமர்சிக்கப்பட்டார். இருந்த போதிலும், மாணவராக இருந்த போது காங்கிரஸ் கட்சியால் சிறையில் அடைக் கப்பட்டவராகவே பானர்ஜி இருந்திருக்கிறார்.  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான கன்னையா குமார்  கைது செய்யப்பட்டது குறித்து 2016 பிப்ரவரியில் இந்துஸ்தான் டைம்ஸில் தனது கருத்தைக் கூறிய இந்த எம்ஐடி பொருளாதார நிபுணர், 1980களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நாட்களில் தான் கைது செய்யப் பட்டது குறித்து பின்வருமாறு எழுதினார்: “நாங்கள் தாக்கப்பட்டோம்” (நான்) திகார் சிறையில் தள்ளப்பட்டேன். தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. ஆனாலும் கொலை முயற்சி மற்றும் மீதமுள்ளவை போடப்பட்டன. இறுதியில் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன - கடவுளுக்கு நன்றி - ஆனாலும் நாங்கள் பத்து நாட்கள் திகாரில் கழிக்க வேண்டியிருந்தது”.

தகவல் ஆதாரங்கள் : தி வயர் இணைய இதழ்

;