tamilnadu

img

குறைந்த கட்டணத்தில் 200 இலவச சேனல்கள் ஒளிபரப்ப டிராய் உத்தரவு

மாதத்துக்கு ரூ.153 கட்டணத்தில் 200-க்கும் மேற்பட்ட இலவச சேனல்களை வாடிக்கையாளர்களுக்கு ஒளிபரப்ப வேண்டும் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், தனது திருத்தப்பட்ட புதிய விதிமுறையில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, மாதத்துக்கு ரூ.153 கட்டணத்தில் 200-க்கும் மேற்பட்ட இலவச சேனல்களை வாடிக்கையாளர்களுக்கு ஒளிபரப்ப வேண்டும். இந்த உத்தரவு மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தற்போது கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வரிகள் உள்ளிட்ட 153 ரூபாய்க்கு 100 இலவச சேனல்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றனர்.  

மேலும், அதிகபட்சமாக வாடிக்கையாளர்கள் இலவச சேனல்களுக்கு ரூ.160 செலுத்தினால் போதுமானது என்று டிராய் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் குறைந்த மாதக் கட்டணத்தில் அதிகமான சேனல்களைப் பார்க்க முடியும். அதேபோல ஒரு வீட்டில் பல தொலைக்காட்சி இணைப்புகள் ஒரு நபரின் பெயரில் இருந்தால், அறிவிக்கப்பட்ட கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எத்தனை சேனல்கள் இலவசமாக ஒளிபரப்பாகிறது என்பதை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

;