tamilnadu

img

நிர்ணயித்த இலக்கில் 50 சதவிகிதமே ஜிஎஸ்டி வசூல்

புதுதில்லி:
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி எனப்படும் ‘சரக்குமற்றும் சேவை வரி’யை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியது.இதன்மூலம் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விதிப்பை 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என்ற நான்குஅடுக்குகளின்கீழ் கொண்டுவந்த மோடி அரசு, இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் வரி வசூலிக்க இலக்குநிர்ணயித்தது. ஆனால், ஜிஎஸ்டி அமல் படுத்தியதிலிருந்து ஒவ்வொரு மாதமும் இலக்கைக் காட்டிலும் குறைவான தொகையே வசூலாகி வருகிறது. 

குறிப்பாக, 2019-20 நிதியாண்டின் ஏப்ரல்முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ. 6 லட்சத்து 63 ஆயிரத்து 343 கோடி வசூல் செய்ய அரசு இலக்குநிர்ணயம் செய்திருந்தது. ஆனால், மொத் தம் ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 490 கோடி மட்டுமே தற்போது வசூலாகியுள்ளது. நிர்ணயித்த வரியில் 50 சதவிகித இலக்கைக் கூட எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் நேரடி வரி வருவாயைப் பொறுத்தவரையில், 2019-20 நிதியாண்டில் ரூ.13 லட்சத்து 35 ஆயிரம் கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது; ஆனால், அக்டோபர் வரையில் ரூ. 5 லட்சத்து 18 ஆயிரத்து 084 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரும் நவம்பர் 25-ஆம்தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண் டுள்ளார்.

;