tamilnadu

img

ஒடிசாவின் 14 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

ஒடிசா மாநிலத்தில், பானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களுக்கு மட்டும் ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டர்னை தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஃபானி புயல் தாக்கியதில், ஒடிசா மாநிலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில், அம்மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம் (சிபிஐசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதில், ஒடிசா மாநிலத்தின் அங்குள், பாலசோர், பாத்ரக், கட்டாக், தேன்கனல், காஞ்சம், ஜகத்சிங்புர், ஜஜ்புர், கேந்திரபர, கியோஞ்சர், கோர்த்தா, மயுர்பஞ்ச், நாயகர்க் மற்றும் பூரி ஆகிய 14 மாவட்டங்களில் சுமார் 1.50 கோடி ரூபாய்க்கும் கூடுதலான விற்று முதல் (Turn Over) உடைய வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் தங்களின் ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர விற்பனை மற்றும் இறுதி விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை வரும் ஜூன் 10-ஆம் தேதி வரையிலும், அதே போல் ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப் பயன்பாடு போக நிகர வரி செலுத்துவதற்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை வரும் ஜூன் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று காலக்கெடுவை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


;