1888 - ‘ஜேக் தி ரிப்பர்’ என்று குறிப்பிடப்பட்ட, இறுதிவரை கண்டுபிடிக்கவேபடாத தொடர் கொலைகாரனால் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் கொலை நடந்தது. லண்டனின் ஒயிட்சேப்பல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக, கொடூரமான முறையில் நடைபெற்ற 11 பெண்களின் கொலைகளில் பல ஒற்றுமைகள் காணப்பட்டதால், ஒருவரே அனைத்தையும் செய்திருக்கவேண்டும் என்ற அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இவை ஒயிட்சேப்பல் கொலைகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், ஐரிஷ் மக்கள் ஏராளமாக லண்டனின் கிழக்குப் பகுதியில் குடியேறினர். 1882இல் ரஷ்யாவிலிருந்து ஜார் அரசரால் வெளியேற்றப்பட்ட யூத அகதிகளும் இப்பகுதியில் குடியேறியதைத் தொடர்ந்து, இது நெருக்கடியான பகுதியாக மாறியதுடன், போதுமான வேலை கிடைக்காமை முதலியவற்றால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் இது ஆனது. அதனால், இப்பகுதியில் வன்முறை, வழிப்பறி, போதை, பாலியல் தொழில் என்று எல்லா சட்டவிரோத செயல்களும் அதிகம் நடந்தன.
அப்படியான நிலையில் நடைபெற்ற 11 கொலைகளில், முகம் சேதப்படுத்தப்பட்டு, வயிற்றைக் கிழித்து உள்ளுறுப்புகள் நீக்கப்பட்டு என்பதான ஒற்றுமைகள் நிலவிய 5 கொலைகளை ஒருவரே செய்திருக்கவேண்டும் என்று காவல்துறை நம்பியது. கொலைகளின் முறையால் கசாப்புக்கடைக்காரர்கள், மருத்துவர்கள் முதலோனோர் கடுமையாக விசாரிக்கப்பட்டாலும், கொலைசெய்யப்பட்ட உடல்களை ஆய்வு செய்த மருத்துவர்கள், அத்தகைய தொழில்களின் அனுபவம் கொண்டவர் அக்கொலைகளைச் செய்யவில்லை என்று கூறிவிட்டனர். கொலைகள் வாரக்கடைசியிலும், இரவிலும் மட்டுமே நடந்ததால், கொலைகாரன் பணியிலிருக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் தேடுதல் நடந்தது. ஆயிரக்கணக்கனோர் விசாரிக்கப்பட்டாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. கொலைகாரனின் அடையாளம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கருதுகோள்கள் நிலவுகின்றன. கொலைகாரன் எழுதியதாக ஏராளமான கடிதங்கள் செய்தித்தாள்களுக்கும், காவல்துறைக்கும் வந்ததால், உலகம் முழுவதும் இச்செய்தி பிரபலமானது. அவ்வாறான ஒரு கடிதத்தில் எழுதியவர் பெயராக இருந்த ‘ஜேக் தி ரிப்பர்’ என்ற பெயராலேயே இன்றுவரை அந்தக் கொலைகாரன் குறிப்பிடப்படுகிறார். இத்தகைய கொலைகளை விசாரிப்பதற்கு ‘ரிப்பராலஜி’ என்ற புது சொல்லே இந்தக் கொலைகளால் உருவாகிவிட்டது. இந்நிகழ்வு, உலகின் முதல் தொடர்கொலைகள் அல்ல என்றாலும், உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது இந்நிகழ்வுதான். இந்நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு சுமார் 50 புதினங்கள், ஏராளமான திரைப்படங்கள் மட்டுமின்றி, மேடை நாடகங்கள், காமிக்ஸ்கள், இசைத் தொகுப்புகள் ஆகியவற்றுடன் வீடியோ கேம்கள்கூட வெளியாகியுள்ளன.
- அறிவுக்கடல்