tamilnadu

img

இந்நாள் செப். 09 இதற்கு முன்னால்

1791 - வாஷிங்டன் நகருக்கு, அமெரிக்க விடுதலைப் போரின் தலைமைத் தளபதியும், அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவருமான ஜார்ஜ் வாஷிங்டனின் பெயர் சூட்டப்பட்டது. வர்ஜீனியாவின் குடிப்படைத் தளபதிகளுள் ஒருவராக 1752இல் நியமிக்கப்பட்டபோது வாஷிங்டனுக்கு வயது 20! 6 ஆண்டுகள் ராணுவப் பணிக்குப்பின், 1758இல் வர்ஜீனியா சட்டமன்ற உறுப்பினராக 26 வயதிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட வாஷிங்டன், 1776இல் அந்த சட்டமன்றம் கலைக்கப்படும்வரை அதன் உறுப்பினராகத் தொடர்ந்தார். 1774, 1775இல் காண்ட்டினெண்ட்டல் காங்கிரஸ் என்ற பெயரில் நடைபெற்ற, ஆங்கிலேயக் குடியேற்றங்களின் கூட்டணியை உருவாக்கிய மாநாடுகளில், வர்ஜீனியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்ற வாஷிங்டன், அந்த அவையால் உருவாக்கப்பட்ட காண்ட்டினெண்ட்டல் ஆர்மி என்னும் அமெரிக்க விடுதலைப் படைக்குத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். எட்டரை ஆண்டுகள் தலைமைத் தளபதியாகச் செயல்பட்டு, அமெரிக்க விடுதலையை வென்றெடுத்ததும், ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால் செல்வதற்குமுன், கூட்டமைப்பின் விதிகள்(ஆர்ட்டிக்கிள்ஸ் ஆஃப் கன்ஃபெடரேஷன்) வெறும் மணல் கயிறுதான் என்றும், உறுதியான மைய அரசு தேவை என்றும் கூறி விட்டுச் சென்றார். 1786இல் நடைபெற்ற ஷேஸ் கலகம் அதை உறுதிப்படுத்திய நிலையில், 1787இல் ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்ற அரசமைப்புச்சட்ட மாநாட்டிற்கு, பொதுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1797வரை முதல் குடியரசுத்தலைவராக இருந்தபோதே வாஷிங்டன் நகருக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.

மாநில அரசுக ளுக்கு ஏராளமான அதிகாரங்களை வழங்கும் கூட்டமைப்பு என்பதால், அமெரிக் காவின் மைய அரசு அமைந்துள்ள பகுதி ஒரு மாநிலத்தின் அதிகார வரம்புக் குள் வரக்கூடாது என்பதற்காக, தனியாக தேசியத் தலைநகரை உருவாக்கு வதற்கான இருப்பிடச்சட்டம் 1790இல் இயற்றப்பட்டு, ஃபோட்டோமேக் ஆற்றின் கரையில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டன. அப்பணிகளை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்த மூன்று ஆணையர்களே நகருக்கு வாஷிங்டன் என்று பெயரிட்டனர். கொலம்பசின் நினைவாக, அவர் பெயரின் பெண்பாலான கொலம்பியா என்ற பெயரில் அமெரிக்காவை குறிப்பி டும் பழக்கம் அப்போது இருந்ததால், தலைநகர் மாவட்டத்திற்கு கொலம்பியா என்ற பெயரையும் அவர்கள் சூட்டினர். கட்டுமானப் பணிகள் நிறைவுற்று, முதன் முறையாக நாடாளுமன்றம் வாஷிங்டனில் 1800இல் கூடுவதற்கு முன்பே, 1799இல் வாஷிங்டன் மறைந்துவிட்டார். தலைநகரின் மக்களுக்கு 1964வரை வாக்குரிமை வழங்கப்படாத செய்தி இத்தொடரில் 2017 நவம்பர் 3இல் இடம்பெற்றுள்ளது.

அறிவுக்கடல்