1946 - பசிபிக் பெருங்கடலின் மார்ஷல் தீவுகளில் ஒன்றான பிகினி அட்டால் தீவில், அணுஆயுதச் சோதனையை அமெரிக்கா நிகழ்த்தியது. சோவியத் ஒன்றியத்தின்மீதான அச்சத்தால், அணுஆயுதங்களை உருவாக்குவதற்காக, 1946-58 காலத்தில் இத்தீவில் 23 அணுஆயுதச் சோதனைகளை அமெரிக்கா மேற்கொண்டது. 42.2 மெகாடன்(4.22 கோடி டன்!) வெடிமருந்தை வெடித்த விளைவை ஏற்படுத்தி இங்கு நடத்தப்பட்டவை, அனைத்து நாடுகளாலும், உலகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த அணுஆயுதச் சோதனைகளில் சுமார் ஆறில் ஒரு பங்கு ஆகும்! கப்பல்க ளை மூழ்கடிப்பதில் அணுஆயுதங்களின் திறனைச் சோதிப்பதற்காக அமெரிக்கா இங்கு கொண்டுவந்த போர்க்கப்பல்களைத் தனியாகக் கடற்படையாக்கியிருந்தால் அது, உலகின் ஆறாவது பெரிய கடற்படையாக இருந்திருக்கும். வானில், கடலுக்கு அடியில் என்று பல்வேறு வடிவங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. முதலிரண்டு சோதனைகளிலேயே கடற் பரப்பின் வெப்பநிலை 55,000 பாகை செண்ட்டிகிரேட் அளவுக்கு உயர்ந்து, 100 அடி உயர அலைகள் எழுந்ததுடன், சேதமுறாமல் எஞ்சியிருந்த கப்பல்கள் சோதனைக்கே பயன்படுத்தமுடியாத அளவுக்கு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுவிட்டன. அதனால் 1954இல்தான் நடத்தப்பட்ட அடுத்தகட்ட சோதனைகளில், ஹிரோஷிமா, நாகசாகி போல ஆயிரம் மடங்கு சக்தி வெளிப்பட்டதுடன், கதிர்வீச்சுக் குப்பைகள் ஆஸ்திரேலியா, இந்தியா என்று உலகம் முழுவதும் கொட்டின. அவற்றால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மீனவர் ஒருவர் சில மாதங்களில் இறக்குமளவுக்கு பாதிப்பு இருந்ததால் உலகம் முழுவதும் தெரிந்துபோனது. இச்சோதனையை நடத்திக்கொண்டிருந்தவர்களின்மீதும் கதிர்வீச்சுக் குப்பைகள் கொட்டி, அவர்கள் தப்பிச் செல்லவேண்டியிருந்ததுடன், மற்ற தீவிலிருந்தவர்களுக்கும் கடுமையான கதிர்வீச்சு பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போதுதான், அணுவெடிப்பின் உடல்நல பாதிப்புகள்குறித்து அமெரிக்கா சிந்திக்கவே தொடங்கியது. அடால் என்றால் பவளத்தீவு. பிகினி அட்டாலிலிருந்தவர்களை, உலகம் முழுதும் போரை ஒழிப்பதற்காக சோதனை என்று சொல்லி மனிதர்கள் வாழாத(வாழ முடியாத) ரோங்கரிக் தீவில் சிலநாட்களுக்கான உணவு, தண்ணீர் மட்டும் வழங்கி இறக்கிவிட்டிருந்தது அமெரிக்கா. அவர்கள் உணவின்றித் தவித்த செய்தி வெளிப்பட்டவுடன் தீவு தீவாக அலைக்கழித்து, பிகினியே பாதுகாப்பானது என்று பொய்சொல்லி அனுப்பியது. பலரும் இறந்தபின் மீண்டும் இடம் மாற்றி, உலகின் கண்டனங்களுக்குப்பின் பல மில்லியன் டாலர்களை இழப் பீடாக வழங்கினாலும், சொந்த மண்ணும், வாழ்வும் அவர்களிடமிருந்து பறிக் கப்பட்டுவிட்டன. (முதல் சோதனை முடிந்து நான்கு நாட்களாகியிருந்த நிலை யில் பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்ட உடைக்கு, இதன் நினைவாகவே பிகினி என்று பெயரிடப்பட்டது. விளக்கமாக ஜூலை 5இல்!)