tamilnadu

img

இலவச மின்சாரம் ஏன்? எதற்கு? - கே.அருள் செல்வன்

கொரோனா நோய் பரவல் ஊரடங்கு அமலில் உள்ள போது மத்திய அரசு மின் சட்ட திருத்தம் 2020 -ன் மீது மாநில அரசுகளிடம் கருத்து கேட்டுள்ளது. தமிழக அரசும்,திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும், விவசாயசங்கங்க ளும், மின்வாரிய தொழிற்சங்கங்களும் இந்த சட்ட திருத்தத் தால் இலவச /மானிய மின்சாரம் வழங்குவது முடக்கப்படும் என்பதாலும் மின்வாரிய தனியார்மயத்தால் சாமானிய மக்கள் பாதிப்படைவார்கள் என்பதால் சட்ட திருத்தத்திற்கு எதிராக கருத்துகளையும் மத்திய அரசுக்கு கடிதத்தையும் எழுதுவதோடு இயக்கங்களையும் நடத்தி வருகின்றன.

தந்தி தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம்  மாநில அரசுகள் இலவச மின்சாரம் மற்றும் சலுகை விலையில் மின்சாரம் வழங்கும் திட்டங்களை மின்சட்ட திருத்தம் 2020 மூலம் மத்திய அரசு முடக்குவது சரியா? என நிருபர் கேள்வி கேட்டதற்கு...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இதற்கு.....

இலவசமாக வழங்கும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை மாநில அரசுகள் சம்மந்தப்பட்ட மின்விநி யோக நிறுவனங்களுக்கு கொடுக்காத காரணத்தால் மின் விநியோக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. 

இதனால் மின்விநியோக நிறுவனங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு பணம் கொடுக்காத நிலை யில்,மின் உற்பத்தி நிறுவனங்கள் இந்த மின்விநியோக நிறு வனங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிடும். இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதனால் இலவசம் மற்றும் சலுகை விலையில் மின்சாரத்தை பயன்படுத்தும் மக்கள் அனைவருக்கும் மின் மீட்டர் பொருத்தப்படும். மேலும் பயன்படுத்தும் மின்சா ரத்திற்கு நேரடியாக பணத்தை விநியோக நிறுவனங்களுக்கு மக்கள் செலுத்த வேண்டும் எனவும் மாநில அரசு இலவ சத்தை விரும்பினால் மக்களின் வங்கிக் கணக்கில் அந்த பணத்தை போட்டுக்கொள்ள தடை இல்லை என தெரி வித்துள்ளார்.

நிதியமைச்சர் அவர்களே!...

மின் விநியோக நிறுவனங்கள் பணம் கொடுக்க வில்லை எனில் மின் உற்பத்தியாளர்கள் மின் உற்பத்தி செய்து கொடுக்கமாட்டார்கள் என கூறிடும் நிதியமைச்சர் அவர்கள் மக்களின் அத்தியாவசிய தேவையான  மின் உற்பத்தி ஏன்  அரசின் கையில் இல்லாமல் தனியாருக்கு போனது? அரசு வங்கிகள் மூலம் தனியாருக்கு கடன் கொடுத்து, மின் உற்பத்தியில் தனியாரை நம்பி இருக்கா மல், தேவையான மின் உற்பத்தியை அரசின் வசம் கொண்டு வர, அரசு உரிய சட்ட திருத்தமும், கொள்கை முடிவும் எடுப்பதுதான் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

இலவசமாக வழங்கும் மின்சாரத்திற்கு உரிய கட்ட ணத்தை  சம்மந்தப்பட்ட ஒரு மின்விநியோக நிறுவனத் திற்கு கொடுக்காத மாநில அரசுகள், அந்த பணத்தை லட்சக்கணக்கான மக்களின் வங்கி கணக்கில் மட்டும் எப்படி பணத்தை போடுவார்கள்? மாநில அரசுகள் மக்களை ஏமாற்றாதா? எனவே மின்விநியோக நிறுவனத்திற்கு பணம் கொடுக்காத மாநில அரசுகளை, மத்திய அரசு நிர்பந்தப் படுத்தி கொடுக்கவைப்பதற்கு பதிலாக மாநில அரசுகள் மக்களை ஏமாற்றிக் கொள்ளுங்கள் என  சட்ட திருத்தம் கொண்டுவரக்கூடாது. விவசாயிகளை பாதுகாக்க விவசாயி களுக்கு இலவச மின்சாரம்  வழங்குவதை மத்திய அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும்.                 

மின் உற்பத்தியில் அரசு கோட்டைவிட்டுவிட்டு தற்போது தனியார் மின் உற்பத்தியை நிறுத்திவிட்டால் என்ன செய்வது என கூறிடும் நிதியமைச்சர், மின் விநியோகத்தை யும் தனியாருக்கு விடுவோம் என மின்சட்ட திருத்தம் 2020 -ஐ கொண்டுவந்தால்  தனியார் நினைத்தால் தான் நாடு ஒளிரும்..இல்லையேல் நாடே இருளில் மூழ்கும் என்பது  தெரியாதா? 

இலவச மின்சாரம் என்பது.. 

தமிழகத்தில் ஒரு பகுதி விவசாயிகள் ஆற்றுப் பாச னத்தையும் மற்றொரு பகுதி விவசாயிகள் நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்றனர். நிலத்தடி நீரை  பயன்படுத்த மின் இணைப்பு  அல்லது டீசல் என்ஜின் தேவைப் படுகிறது. நாட்டின் தவறான சந்தைப்பொருளாதாரம் காரணமாக இலவசமாக ஆற்றுப் பாசனத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருள்களின் விலையே கட்டுபடி யாகாமல் விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர். இலவச ஆற்றுப் பாசனம் என்றாலும் மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்தாலும் மார்க்கெட்டில் ஒரே விலைதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த சூழலில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்பவர்கள் ஆற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகளை விட கூடுதல் நஷ்டம் அடைவதில் இருந்து பாதுகாக்க இலவச மின்சாரம் அரசு வழங்குவது என்பது மிகவும் தேவையான ஒன்றாகும்.

கட்டணம் நிர்ணயிக்கும்  மாநில உரிமை பறிப்பு

தற்போது உள்ள மின்சட்டத்தில் மின்கட்டணம்  மாநில அரசின் விருப்பத்திற்கு அல்லது கொள்கை முடிவிற்கு ஏற்ப விவசாயம், பட்டு புழு வளர்ப்பு,தோட்டக்கலை, தாவர வளர்ப்பு, மீன்/எறா வளர்ப்பு,கைத்தறி, விசைத்தறி,சிறு மற்றும் குறு தொழில்களுக்கும் குடிசைகள், குடியிருப்பு கள், முதியோர் இல்லங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு மானிய விலையிலும், காவல் துறை, இராணுவம், ரயில்வே குடியிருப்புகள், தெருவிளக்குகள், அரசு குடிநீர் வழங்கல், துப்புரவு துறை, வணிகம்,தொழிற்சாலைகளுக்கு போன்ற வைகளுக்கு சரியான மின்கட்டணம் மற்றும் இடை மானிய மிகை கட்டணமாக கூடுதல் விலையிலும் வேறுபட்ட மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் முறையை மின் சட்ட திருத்தம் 2020 ரத்து செய்து அனைவருக்கும் ஒரே மின்கட்டணம் என புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவருகிறது. மேலும் மாநில அரசிடம் இருந்த மின் கட்டணம் நிர்ணயிக்கும் உரி மையை பறித்து அந்த உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொண்டு இந்தியா முழுவதும் பெரும்தொற்சாலைகள்,சிறு,குறு தொழில்கள்,வணிகம்,குடியிருப்பு போன்ற அனைவருக் கும் ஒரே மின்கட்டணம் நிர்ணயிக்க போவதாக புதிய மின் சட்ட திருத்தம் 2020-ஐ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மின் சட்ட திருத்தம் 2020 மூலம் மின்கட்டண நிர்ண யிப்பில் குறைவான மின்கட்டணம் உள்ள இலவச, மானிய மின் இணைப்புகளின் மின் கட்டணத்தை உயர்த்துவதோடு, இடைமானியமும் நீக்கப்பட்டால் தற்போது உள்ள இல வசம் மற்றும் மானிய மின் இணைப்புகளின் மின் கட்டண  தொகை பல மடங்கு அதிகரிக்கும். இதனால் மின்வாரி யங்களுக்கு அரசு பல மடங்கு கூடுதலான மின் கட்டண தொகை வழங்க வேண்டியதால் மாநில அரசின் சுமை அதிக மாகும். ஏற்கனவே கடனிலும் நிதிச்சுமையிலும் உள்ள மாநில அரசுகள் மக்களின் சமூக வாழ்வாதாரம் மேம்பட இத்தகைய இலவச மற்றும் மானிய மின் வழங்கும் திட்டங்களை கைவிட வேண்டிய கட்டாய நிலைமையை இந்த மின் சட்ட திருத்தம் 2020 ஏற்படுத்தும்.

ஒழித்துக் கட்டும் முயற்சி

மாநில அரசுகள் இத்தகைய இலவச மற்றும் மானிய மின் இணைப்பு திட்டங்களை கைவிட்டு, மக்களை ஏமாற்று வதற்கும் வசதியாக, தற்போது வரை இந்த இலவச மற்றும் மானிய மின்கட்டண தொகையை மொத்தமாக மாநில அரசு மின்வாரியங்களுக்கு நேரடியாக செலுத்தி வந்ததை மாற்றி, ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே ரேசன் கார்டு போல இந்தியா முழுமைக்கும் நிர்ணயிக்கப்படும் அனைவருக்கு மான ஒரே விலையில் உள்ள மின் கட்டணத்தை அனைத்து மின் பயன்பாட்டாளர்களும் மின்வாரியத்துக்கு செலுத்தி யாக வேண்டும், இலவசமும், மானியமும் மாநில அரசுகள் தொடர விரும்பினால், மத்திய அரசு சமையல் எரிவாயுக்கு மானியத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவது போல(?), மின் கட்டண தொகையை உரிய மின் நுகர்வோ ரின் வங்கி கணக்கில் மாநில அரசுகள் செலுத்தி கொள்ள லாம் என மின் சட்ட திருத்தம் 2020 மூலம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தம் மூலம் இலவச மின்சா ரத்தையும், மானிய மின்சாரத்தையும் மத்திய அரசு ஒழித்துக்கட்ட முடிவெடுத்துள்ளது.

மின் மாற்றியில் 1 KVA வுக்கு இணையான 1 HP மின் பளு வை விவசாய மின் இணைப்பில் கூடுதலாக பெற்று மின்சா ரத்தை பயன்படுத்திட  விவசாயிகள் 1 HP -க்கு ரூபாய் 20,000 செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு கட்டணம்  பெரு முதலாளிகளுக்கு இலவசம்

தமிழக மின்வாரியத்தில் மட்டும் 50 KVA முதல் 500 KVA வரை 2 லட்சத்து 93 ஆயிரம் மின்மாற்றிகள் உள்ளன. இதில் மொத்தமாக 4 கோடி KVA மின் திறன்  உள்ளது. தனியார்கள் இந்த மொத்த மின்மாற்றிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்திட, (விவசாயிகளிடம் 1 HP 20 ஆயிரம் வசூலிப்பது போல) இந்த 4 கோடி KVA வுக்கு 80 ஆயிரம் கோடியை செலுத்த வேண்டும்  என மத்திய அரசு சட்ட திருத்தத்தை கொண்டு வராமல், கட்டமைப்பை முன் கட்டணம் செலுத்தாமல் பெரு முதலாளிகள் வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ள அரசு, உணவு உற்பத்தியில் ஈடுபட்டு நஷ்டத்தில் உள்ள பாவப்பட்ட விவசாயிகளிடம் 1 HP -க்கு 20 ஆயிரம் செலுத்த வேண்டும் என  வசூலிப்பதும் கண்டனத்திற்குரியது. 

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் என்பது நிலத்தடி நீர் விவசாய உற்பத்தியை, ஆற்றுப் பாசன விவசாய உற்பத்தியோடு சமன்படுத்திடவும், உணவு உற் பத்தியை பாதுகாக்கவும் இன்றியமையாத தேவையாக உள்ளது. குடிசைகளுக்கு இலவச மின்சாரமும், வீடு களுக்கு 100 யூனிட் இலவசமும் அதற்கு மேல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மானியமும், கைத்தறி, விசைத்தறி,சிறு,குறு தொழில்களுக்கு மானியமும் சமூக மேம்பாட்டுக்கு மிகவும் அவசியமான தேவையான இந்த சலுகைகளை அகற்றிடவே மின் சட்ட திருத்தம் 2020 கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம் தற்போது உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் எனில் தமிழக அரசு இலவச மற்றும் மானிய மின் இணைப்புகளின் மின் கட்டண தொகையை உயர்த்துவது மட்டும் போதாது, அரசின் சொந்த மின் உற்பத்தியை படிப்படி யாக உயர்த்தி மின்சார கொள்முதலை படிப்படியாக கைவிட வேண்டும்.மின் கொள்முதல், நிலக்கரி கொள்முதலில், தளவாடப் பொருள்கள் கொள்முதலில், புதிய கட்டுமான ஒப்பந்தங்களில் வெளிப்படை தன்மையும்,நேர்மையும் இருப்பதன் மூலமே சாத்தியமாகும். நஷ்டத்தில் இருந்து மீண்டு வர மின்சட்ட திருத்தம் 2020 எவ்விதத்திலும் உதவாது.

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன்