பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பல லட்சக்கணக்கான பேர் கொரோனா காலத்தில், குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகை விவசாயி அல்லாதவர்களுக்கு, குறுக்கு வழியில் பணத்தைப் பெற்றுக் கொண்டு நெட் செண்டர்கள் மூலமாக சேர்க்கப்பட்டு ரூ 4,000 பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்க கூடியதாக உள்ளது.
தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்குவோம் என்று அறிவித்தது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.4000 உதவித்தொகை வழங்கினார்கள். இந்தத் திட்டத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மத்திய பாஜக அரசு கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2018. 19 ஆண்டுகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தது.அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு போன்ற அமைப்புகள் விவசாயவிளைபொருட்களுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கம் வடமாநிலங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் இணைந்த கூட்டு நடவடிக்கை போராட்டம்மத்திய அரசை யோசிக்க வைத்தது. அதன் காரணமாக உருவாக்கப் பட்டதுதான் இத்திட்டம்.
பிஎம் கிசான் திட்டம்
பிரதமர் விவசாயிகள் உதவி திட்டம் 1.12.2018 முதல் செயல்படத் துவங்கியது. மத்திய அரசின் 100 சதவித நிதியுடன் செயல்படும் திட்டம், ஐந்து ஏக்கர் நிலம் உடைய சிறு, குறு விவசாயிகள் குடும்பத்தில் ஒருவர் மட்டும் பலன் பெற முடியும். பயனாளிகளை மாநில அரசு தேர்வு செய்யும். நிதி பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் மட்டும் 3 தவணையாக ரூ.2000 அனுப்பப்படும்.நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலாக ஓய்வூதியம் பெறுவோர் (டி பிரிவைத் தவிர) வருமானவரி கட்டக்கூடிய டாக்டர்கள், வழக்கறிஞர், பொறியாளர்கள், நிலம் வைத்திருந்தாலும் இந்த நிதி உதவியை பெற முடியாது.
இந்திய நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த சீக்ரெட் கோடு ஒன்று வழங்கப்பட்டது. பிரதமர் கிசான் திட்டத்தில் சேருவதற்கு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பட்டா சிட்டா சான்றிதழ், சர்வே நம்பர்.சப் டிவிஷன் உள்பட சரிபார்த்து சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் ஆதார் அட்டை ரேஷன் அட்டை இணைத்து பதிவு செய்யப் பட்டது. தமிழ் நிலம் என்ற ஆப் மூலம் பட்டாக்கள் சர்வே எண்கள் சரிபார்க்கப்பட்டது.pm-kisan திட்டத்தில் ரூ.6000 உதவித்தொகை பெறுவதற்கு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பெற முடியும். எனவே அதற்கு ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டது.கிராம நிர்வாக அதிகாரி சான்றிதழோடு வட்டார வேளாண் அலுவலர்கள் மனுக்களை சரிபார்த்து இணையத்தில் பதிவு செய்து அனுப்பினார்கள். சரியான மனுக்களை மாவட்ட வேளாண் அலுவலகங்களில் அனுமதிக்கப்பட்டு உதவித்தொகை பரிந்துரை செய்யப்பட்டது.இவ்வாறாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சிறு குறு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. முதலில் வங்கிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.2000, பின்பு ரூ.2000அனுப்பப்பட்டது. இந்திய நாடு முழுவதும் pm-kisan திட்டத்தில்8 கோடியே 50 லட்சம் பேர் பயனாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் அவர்களுக்கு 17 ஆயிரத்து 100 கோடி ரூபாய் உதவித்தொகையாக அனுப்பப்பட்டது. தமிழகத்தில் 40 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள் ளார்கள் இதுவரை அதிகபட்சமாக எட்டு தவணைத் தொகை ரூ 16 000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் சேர்க்கையில் மாற்றம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல மாநிலங்களில் போதிய அளவுக்கு இந்த திட்டத்தில் சேர்க்கப்படாத சூழ்நிலையில் மத்தியஅரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. பட்டா சிட்டா, ரேஷன்கார்டு இல்லாமல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண், வங்கி ஐஎப்எஸ்சி கோடு உள்ளிட்ட விவரங்களை மட்டும் பெற்றுக்கொண்டு இத்திட்டத்தில் பயனாளிகளாக மாற்றப் பட்டனர். 5 ஏக்கருக்கு மேலாக உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நாடு தழுவிய விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் பெரும் விவசாயிகளும் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
கொரோனா காலத்தில் திட்டத்தில் மாற்றம்
கடந்த மார்ச் 22ஆம் தேதிக்கு பிறகு கொரானா காலத்தில் நெட்சென்டர் கள் மூலம் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மாவட்ட வேளாண் இணை இயக்குனருக்கு வந்து சேரும். தனியா நெட் சென்டர்களில் பிரதமர் விவசாயிகள் உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்க துவங்கிய பிறகு பல்வேறு குளறுபடிகள் துவங்கியுள்ளன. ஒரே நாளில் ஒரு ஒன்றியத்தில் அதிகமான மக்கள் வந்ததும் சரி பார்க்கப்பட்டு பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கடலூர் 78,000, திருவள்ளூர் 72000, சேலம் 95000, விழுப்புரம் 68000, கள்ளக்குறிச்சி 80000,திருவண்ணாமலை 52000 மற்றும் வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி,தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மனுக்கள் விண்ணப்பிக்க பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீக்ரெட் நம்பரைபயன்படுத்தி உள்ளே புகுந்து அதிக அளவில் மனுக்களை தேர்வு செய்துபட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளனர்.திருவள்ளுவர் மாவட்ட பாஸ்வேர்ட் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில்உள்ளவர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சிமாவட்டம் ரிஷிவந்தியத்தில் தமிழன் ஏவிஎம் நெட் சென்டரில் பத்து கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி பத்தாயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். சங்கராபுரம் அன்சிகா நெட் சென்டரில் 25 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.இணையவழியில் விவசாயிகளின் பெயரை இணைக்க புரோக்கர் கள், விவசாயிகளிடம் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. உளுந்தூர்பேட்டை சாலி கிராமத்தில் முருகவேல் ரூ.500, மாடல் கிராமத்தில் திருநாவுக்கரசு ரூ.1000 வசூலித்துள்ளனர். திருநாவலூர் ஒன்றியம் கோட்டயன் பாளையம், கீழ குப்பம், மதியனூர் உள்ளிட்ட கிராமங்களில் சிவராமன் நூறு பேரிடம் பணம் வசூலித்து உள்ளனர். புரோக்கர்கள் மூலம் பணம் பெற்ற விபரம் உள்ளிட்ட அடங்கிய மனுவை மே, ஜூன், ஜூலை மாதங்களில் தொடர்ச்சியாக சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்ட குழுவின் சார்பில் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் அணிவ பாலை கிராமத்தில் ரூ.1500 வசூலித்துள்ளார்கள்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வல்லம் பகுதியில் 15 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசூர் கிராமத்தில் ரூ.300 பெற்றுக்கொண்டு பணம் வந்தவுடன் ரூ700 தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேர்த்துள்ளனர்.முட்டத்தூர் நல்லாம்பாளையம் பெரும்பாக்கம் கிராமங்களில் 500 முதல் 2000 வரை பணம் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேர்த்து வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 78000 நபர்களில் 38,000 நபர்களின் வங்கிக் கணக்குகள் வெளி மாவட்டத்தில் உள்ளது. குறிப்பாக விருதாச்சலம், மங்கலம்பேட்டை பகுதியைச் சார்ந்தவர்கள் உளுந்தூர்பேட்டை வங்கி கணக்கை கொடுத்துள்ளார்கள்.திருமுட்டம் ஒன்றியம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த பாக்யராஜ், கம்மாபுரம் வேளாண் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் பணம் பெற்றுத் தருவதாகக் கூறி பேரூர் விவசாயிகளிடம் ரூ.500, ரூ.1000 வசூல் செய்துள்ளார்.கடலூர் ஒன்றியம் பில்லாலி கிராமத்தில் சதீஷ் என்பவர் தலா ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு 34 நபர்களை இணைத்துள்ளார்.
காரைக்காடு ஊராட்சி பிள்ளையார் மேடு கிராமத்தில் 300 பேர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர் கிராமத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினரின் மகன் மணப்புரம் பைனான்சில் வேலை செய்யும் சதீஷ் குமார் என்பவர் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு 100 நாள் அட்டையில் உள்ள விபரங்களைகளை வைத்தும் நபர்களை பட்டியலில் சேர்த்துவிட்டு வீடு வீடாகச் சென்று ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதனை ஒட்டி கிராமத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சம்பவம் வெளியே கசிந்துள்ளது.அதைவிடக் கொடுமை படிக்கக்கூடிய மாணவர்களின் வங்கி கணக்கு அனுப்பி பணம் பெற்றுள்ளனர். புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பில் அமுதா நெட் சென்டரில் நூற்றுக்கணக்கான மனுக்கள்அனுப்பப்பட்டுள்ளன. வளையமாதேவி பகுதியை சார்ந்தவர்கள் நெட் சென்டரில் 2500 மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புலவனூர் பகுதியில் திருக்கோவிலூரைச் சார்ந்தவர்கள் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு மாத தவணை தொகை அனுப்பப்பட உள்ளது என்பதை தெரிந்து கொண்டு ஜூலை மாதங்களில் அதிக அளவில் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.முதலில் திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனரின் பாஸ்வேர்ட் கணக்கில் உள்ளே வேளாண் உதவி அலுவலர் துணைகொண்டு அனுப்பி உள்ளனர். பின்னர் நாளாக நாளாக பல மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குனர் கணக்கின் உள்ளே சென்று பல ஆயிரக்கணக்கான மனுக்கள் அனுப்பப்பட்டு அதற்கான 2 தவணை தொகை ரூ.4000 பெற பல மனுக்களின்பேரில் பல லட்சகணக்கான பணம் மோசடி செய்துள்ளனர்.கடந்த 15 தினங்களுக்கு முன்பு மாநில வேளாண் துறை மூலம் ரகசிய பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள். 13 மாவட்டங்களில் போலியான நபர்களை விவசாயிகள் பட்டியலில் இணைக்கப்பட்ட தகவல் தெரிந்த பிறகு தற்போது பிரதமர் விவசாய உதவி திட்ட கணக்குகள் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிரச்சனைக்குரிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. முறைகேடுகள் நடந்துள்ள மாவட்டங்களில் விசாரணை நடத்தப்படும் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அறிவித்தார். பின்பு வேளாண்மை இயக்குனர் ககன்சிங் பேடியும் விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள், முறையீடு செய்த பின் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.அதனடிப்படையில் ஒவ்வொரு கிராமமாக பயனாளிகளின் விபரங்களை ஆய்வு செய்வதற்கு நிர்வாக அலுவலர், வட்டார வேளாண் அலுவலர்கள் மாவட்ட இணை இயக்குநர், வட்டாட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோர் ஒரு வாரகாலத்தில் இதற்கான ஆய்வை முடித்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வின்போது தவறான பதிவுகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்கள்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். இதனிடையே, தமிழகத்தில் நடந்த மோசடியை தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பல லட்சம் பயனாளிகளுக்கு பணம் அனுப்பாமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
இந்த மோசடியில், வேளாண்மை துறை அதிகாரிகள், இணைய மையங்களை நடத்துபவர்கள் இவர்களுக்கிடையில் புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் என பலநூறு பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சிறு- குறு விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டிய அரசின் நிதி உதவியை இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்ற நபர்கள் பெயரை பட்டியலில் சேர்த்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்து பலனடைந்திருக்கிறார்கள்.எனவே, இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து தண்டிக்கப்பட வேண்டும். மக்களுக்கான திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஊழல்,முறைகேடு, மோசடி என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதற்கெதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும். மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற எங்களை அணுகுங்கள் என்று பாஜகவைச் சார்ந்த பலர் பகிரங்கமாக விளம்பரம் செய்தனர். அவர்களுக்கும் இந்த மோசடிக்கும் சம்பந்தமிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன், தகுதியற்ற நபர்கள் நீக்கப்பட்டு உண்மையான விவசாயிகளுக்கு அரசின் திட்ட உதவிகள் சென்று சேர்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.பல மாவட்டங்களில் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாலும், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும், மோசடி பேர் வழிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாலும் இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததையொட்டி திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால் உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படுவார்கள்.எனவே, விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விண்ணப்பக் குளறுப்படிகள்
மறுபுறத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த பல ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இன்றும் கிடைக்காதநிலை உள்ளது. பலமுறை விண்ணப்பித்தும் கூட பட்டியலில் ஏறாமல் ஏதாவது காரணத்தால் தள்ளுபடி செய்யும் நிலை இருக்கிறது.குத்தகை விவசாயம் செய்யும் லட்சக்கணக்கான விவசாயிகள் pm-kisan நிதியை பெறமுடியவில்லை. அவர்களுக்கு சிட்டா பட்டா இல்லாததால், அவர்கள் பெயரில் நிலம் இல்லாத காரணத்தால் பெற முடியாதநிலை உள்ளது. கோயில், வக்போர்டு தேவாலயம், மடம், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் பயிர் செய்யும் லட்சக்கணக்கான விவசாயிகள் பிரதமர் உதவித்தொகையை பெற முடியாமல் தவிக்கின்றனர்.குத்தகை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதற்கான மாற்றங்களை மத்திய அரசு உருவாக்கிட வேண்டும்.
இது நிரந்தர தீர்வல்ல
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, பிரதமர் கிசான் திட்டம் ஆண்டிற்கு 6000 ரூபாய் வழங்குவதால் விவசாய நெருக்கடியை தீர்க்க முடியாது. விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலைகிடைக்காததால் கடன் தொல்லையால் விவசாயிகளின் தற்கொலைகளும் தொடர் மரணங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இதைதடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.விவசாய விளை பொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரை அமுலாக்கப்பட வேண்டும். இன்றைய நிலைமையில் விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து விடுவிக்க அவர்கள் வாங்கி இருக்கக்கூடிய தேசிய வங்கி கடன், கூட்டுறவு வங்கி கடன், நகை கடன், கல்விக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் மத்திய அரசு மாநில அரசு தள்ளுபடி செய்வதன் மூலமே விவசாயிகளை பாதுகாக்க முடியும் என அகில இந்திய விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் தொழிலாளர், விவசாயிகள் விவசாய தொழிலாளர் ஒற்றுமையை மேலும் மேலும் பாதுகாத்து ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
===கோ.மாதவன்===
மாநில செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்