tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் - 2019 மகுடம் யாருக்கு?

கிரிக்கெட் ரசிகர்களுக்கு 50 நாட்கள் விருந்து படைக்க காத்துக்கொண்டி ருக்கும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. கோப்பை யாருக்கு என்ற கோதாவில் பட்டத்தை தட்டிச் செல்வது யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.கால் நூற்றாண்டுக்குப் பிறகு ரவுண்ட் ராபின் அடிப்படையில் லீக் ஆட்டங்கள் நடப்பதால் தொடக்கம் முதலே பரபரப்புக்கும் அதிரடிக்கும் பஞ்சமே கிடையாது. அனல் பறக்கும் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் மிகவும் திறமை வாய்ந்த அணிகள் என்றாலும் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் அந்த நான்கு அணிகள் பற்றி அலசுவோம்.கடந்த முறை முதல் சுற்றோடு வெளியேறிய இங்கிலாந்து அணிக்கு சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது. சமீப காலமாக அந்த அணி வீரர்களின் ஆட்டமும் மெருகேறியிருக்கிறது. ருத்ரதாண்டவம் ஆடி வருவதால் 35 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்தனர்.  அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  480 ரன்களை  குவித்து உலக சாதனை படைத்து மலைக்க வைத்தது. இங்கிலாந்தின் சூழ்நிலையும் அந்த அணிக்கு சாதகமாக அமைந்திருப்பதால் முதல் முறையாக கோப்பையை வென்று வரலாற்றை மாற்றி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.தனது நேர்மையான விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவைப்பெற்றுள்ள நியூசிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் வெகுண்டு எழுவார்கள். சொந்த மண்ணில் கேப்டன் மெக்கல்லம் கடந்த உலக கோப்பையில் வெடித்த சரவெடியும் அதிரடியுமா ரசிகர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை. அவரது ஓய்வுக்குப் பிறகு வில்லியம்சன் தலைமையில் வெற்றிகளைக் குவித்து வருகிறது. அனுபவம், ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருப்பதால் எந்த சூழ்நிலையிலும் வெற்றிப்பாதைக்கு அழைத்துக் செல்லக்கூடிய திறமையான வீரர்கள் இருப்பதால் இந்த அணியும் பந்தயத்தில் முந்துகிறது.நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை அவ்வளவு சுலபத்தில் எடை போடமுடியாது. ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிய டேவிட் வார்னர், அனுபவ வீரர் ஸ்டீவன் ஸ்மித் இருவரின் வருகை புதுத்தெம்பும், மனரீதியாக வலிமையும் கொடுத்திருக்கிறது. அதிரடி வீரர் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அந்த அணியின் பலம் மிக்கது என்பதால்  கோப்பையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.முந்தைய உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த அணிகளில் இந்தியாவுக்கு முதலிடம். கடைசியாக விளையாடிய 13 தொடர்களில் 12-ல் மகுடம் சூடியது. கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமான பேட்டிங்கும் டோனியின் அனுபவ மும் புதுமுகங்களின் வரவும் வெளிநாட்டு தொடர்களிலும் வெற்றிகளை குவித்ததால் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இருப்பினும் கணிப்புகளும் காட்சிகளும் மாறலாம்.

கடந்து வந்த பாதை...
உலக நாடுகள் பலவற்றிலும் நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகரித்து வரும் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி குறித்து ஒரு பார்வை;முதல் இரண்டு உலகக் கோப்பையிலும் முதல் சுற்றோடு நடையை கட்டியதால் வெங்கட் ராகவன் தலைமையில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. 1983 இல் கபில்தேவ் தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி வேகப்பந்து -அசூர பலம் கொண்ட அணிகளை அடக்கி கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. அடுத்த முறை சொந்த மண்ணில் நடந்தும் கோப்பையை தக்க வைக்க முடியாமல் போனது. அரையிறுதியோடு வெளியேறியதால் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கபில்தேவ்.ஐந்தாவது கோப்பைக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட முகமது அசாருதீன் தலைமையிலான அணி 8 ஆட்டங்களில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்று ஏழாவது இடத்தை பிடித்தது.

போர்க்களம்
96-ம் ஆண்டில் தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி இலங்கையிடம் அரையிறுதியில் படுமோசமாக விளையாடியதால் 70 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருந்த கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானமே போர்க்களமானது. ஒரு கேலரிக்கு தீ வைத்தனர். அத்தோடு ஆட்டத்தை முடித்துக் கொண்டு இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். வினோத் காம்ப்ளி கண்ணீ ரோடு வெளியேறினார். அடுத்த தொடரில், சூப்பர் சிக்ஸ் பிரிவோடு வெளியேறியதை தொடர்ந்து மூன்று உலகக் கோப்பைக்கு கேப்டனாக இருந்த அசாருதீன் இந்தத்தொடரோடு அவர் ராஜினாமா செய்தார்.

பறிபோனது!
2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணிக்கு சவுரவ் கங்குலியை கேப்டனாக நியமித்தது நல்ல பலன் கிடைத்தது. நமது வீரர்களின் ஆதிக்கம் மற்ற அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால் கோப்பையுடன் வருவார்கள் என்று நாடே எதிர்பார்த்தது. ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத இந்திய அணி மிருக பலம் கொண்ட ஆஸ்திரேலியாவிடம் இறுதியாக விழுந்ததால் கோப்பை கை நழுவிப் போனது. பயிற்சியாளர் கிரேக் சாப்பல்-கங்குலி இடையேயான மோதல் உச்சத்தை அடைந்தது. கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ராகுல் திராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியிலிருந்தும் கழற்றிவிட முயற்சித்தார். சீனியர் வீரர்களான டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், ஹர்பஜன்சிங் ஆகியோர் தாதாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் அணியில் இடம் கிடைத்தாலும் ஒற்றுமை ஏற்படாததால் முதல் சுற்றோடு மூட்டையை கட்டியது.

எழுச்சி!
2007-ம் ஆண்டு முதல் சுற்றோடு வெளியேற காரணமாக அமைந்த வங்கதேசத்துடன் முதல் ஆட்டம் என்பதால் 2011இல் மிக கவனத்துடன் அடியெடுத்து வைத்த தோனி தலைமையிலான இந்திய அணி 187 ரன்களில் வாரி சுருட்டியது. இங்கிலாந்துடன் சமநிலையில் முடிந்தது. இக்கட்டான கட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சாய்த்து நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தனர். இரு முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் பங்கேற்ற கடைசி போட்டி இந்தியாவுடன் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. ஆனாலும் சதமடித்த திருப்தியோடு வெளியேறினார். பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பஞ்சாப் முதல்வர் என முக்கிய பிரமுகர்களுடன் 35,000 ரசிகர்கள் குழுமியிருந்தனர். வீறுகொண்டு எழுந்த இந்திய பந்துவீச்சு பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லீக் ஆட்டங்களில் பாகிஸ்தானை தவிர வேற எந்த அணியுடனும் தோற்காத இலங்கை இறுதி போட்டியில் நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொண்டது. மகேலா ஜெயவர்தனே சதமடிக்க, 274 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தனது கடைசி ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் களமிறங்கிய சச்சின் சோபிக்கவில்லை. நெருக்கடியை சமாளித்து கம்பீர் கைகொடுக்க கடைசி கட்டத்தில் குலசேகரா வீசிய 49 ஓவரின் இரண்டாவது பந்தை சந்தித்த கேப்டன் தோனி, லாங் ஆன் திசையில் எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்பி ஆட்டத்தை கச்சிதமாக முடித்தார். அரங்கமே அதிர்ந்தது. அந்த இரவு ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவுகளாகும். கேலரியிலிருந்த சச்சின் மைதானத் திற்குள் ஓடி வந்தார். சிறுவனாக பந்தெடுத்து போட்ட மைதானத்தில் உலக கோப்பையை கைபிடித்ததால் அதிக உணர்ச்சிவசமாக காணப்பட்டார்.11 ஆவது உலகக் கோப்பைக்கும் தோனியே தலைமை தாங்கினார். அரையிறுதி வரைக்கும் முன்னேறிய இந்தியா சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.