tamilnadu

img

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கை அமுல்படுத்தலாம் : ப.மாணிக்கம் தாகூர் எம்.பி

விருதுநகர்:
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தி விட்டு, பிற பகுதிகளில் தொழில்களை தொடர அனுமதிக்க வேண்டும் என  விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசும், தமிழக அரசும், கொரோனா தொற்று பரவிய போது, ஊரடங்கை அமுல்படுத்தியதை காங்கிரஸ் கட்சி முதலில் பாராட்டியது. ஆனால், தற்போது தொற்றிலிருந்து பலர் குணமாகி  வரும் நிலையில்,  மேலும் இரு வாரங்களுக்கு அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கை நீட்டித்தது  சரியல்ல. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் 2 ஒன்றியங்களில் மட்டுமே வைரஸ்  தொற்று கண்டறியப்பட்டது. இதற்காக ஒட்டு மொத்த மாவட்டத்திலும் ஊரடங்கை அமல்படுத்துவது சரியல்ல.

மத்திய அரசு, எவ்வித நிவாரணத்தையும் அறிவிக்காமல் வெறும் ஆலோசனையை மட்டும் தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.7500 தர வேண்டுமென வலியுறுத்தினோம். குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாவது வழங்கிருக்கலாம். அதைக்கூட பிரதமர் மோடி செய்யவில்லை.தற்போதைய சூழ்நிலையில், சாதாரண ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடுத்தர குடும்பத்தினரும், சிறு தொழில் புரிவோரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.   அனைத்து தரப்பினருக்கும் நிவாரணம் வழங்கியிருந்தால் ரூ.65 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகி இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், மத்திய அரசு, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பெரும் பணக்காரர்களுக்கு ரூ.65 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது.

மாநில அரசோ, ஏழை, எளிய மக்களுக்கு உண்பதற்கு லாயக்கற்ற அரிசியை ரேசனில்  வழங்கி வருகிறது. ஊரடங்கை நீட்டித்தால் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.