tamilnadu

img

ஈமு கோழி மோசடி - 10 ஆண்டுகள் சிறை!

ஈமு கோழிப் பண்ணை மோசடியில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் மணிகண்டன் என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற ஈமு கோழி பண்ணை ஒன்றை  நடத்தி வந்தார். 
அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று மணிகண்டன் தெரிவித்ததைத் தொடர்ந்து பலரும் அதில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அவர் தெரிவித்தபடி லாபத்தொகை எதுவும், கொடுக்கவில்லை. பணத்தைத் திரும்பி கொடுக்காமல் இழுத் தடித்து வந்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் 105 பேரிடம் ரூபாய் 1 கோடியே 32 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காவல் துறையின் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை கோவை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
இந்த வழக்கில் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் சுமார் 85 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.