உளுந்தூர்பேட்டை, நவ.16- நன்னாரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுததி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நன்னாரம் கிளை சார்பில் சனிக்கிழமையன்று (நவ.16) களமருதூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய நன்னாரம் கிராமத்தில் கோவிலுக்குச் செல்லும் சாலையை சிமெண்ட் சாலையாக அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கான தானிய களத்தை சிமெண்ட் களமாக அமைத்து தரவேண்டும், சித்தேரி பெரிய ஏரியில் பழுதடைந்து கிடக்கும் இரண்டு மதகுகளை பாசனத்திற்காக சீரமைக்க வேண்டும், பழுதடைந்து இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 2 மினி டேங்க்குகளை புதுப்பிக்க வேண்டும். சேதமான பள்ளிக் கட்டிடத்தை அகற்றி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், இரண்டு ஆண்டுகாலமாக வழங்காத நூறு நாள் வேலையை உடனடியாக வழங்கிட வேண்டும், திருநறுங்குன்றம் கிராம சுடுகாட்டுப் பாதையை சீரமைத்து; பழுதடைந்துள்ள 3மினி டேங்குகளை பழுது நீக்கம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ராமு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, துணைச் செயலாளர் மு.சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் ஏ.தங்கமணி, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.அலமேலு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.எஸ் மோகன், சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் வி.மார்த்தாண்டன், பொருளாளர் வீ.காரல்மார்க்ஸ் நிர்வாகிகள் டி.ரகு, ஜி.சத்யராஜ், எஸ்.சுபாஷினி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.