tamilnadu

img

விருதுநகர் வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் வச்சக்காரப்பட்டயில்  உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே உள்ள தம்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் (53) என்பவருக்கு விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 25-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வழக்கம் போல் இன்று காலை பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் வெடி மருந்து கலவை செய்த போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த 3 அறைகளும் இடிந்து சேதமடைந்தன.
வெடி விபத்து ஏற்பட்ட அறையில் மருந்து கலவை செய்து கொண்டிருந்த கன்னிச்சேரி புதூரைச் சேர்ந்த காளிராஜ் (20), சதானந்தபுரத்தை சேர்ந்த வீரக்குமார் (52) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடி விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியேறினர்.
தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீஸார், விருதுநகர் மற்றும் சாத்தூரில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த இருவரது உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்த தம்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணகுமார் (25), எஸ்.ரெட்டியபட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (17) ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
இந்த வெடி விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் முருகேசன் மீது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்த  சம்பவம் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரும் கன்னிசேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (24) த/பெ.செந்தில் மற்றும் இனாம் ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (17) த/பெ.சுப்புராஜ் ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.