விழுப்புரம், .பிப்.15- விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி - தஞ்சாவூா் நான்கு வழிச்சாலை பணிக்கு நிலம் வழங்கியவா்கள், அந்தந்த கிராமங்களில் சிறப்பு முகாம் மூலம் இழப்பீட்டுத் தொகையை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பொருட்டு, விழுப்புரம், விக்கிரவாண்டி வட்டங்களில் நிலம் அளித்தவர்கள் இதுநாள் வரை இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளாதவர்கள் இழப்பீட்டுத் தொகையை உடனே பட்டுவாடா செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டார். இந்த சாலைக்காக நிலம் வழங்கிய நில உடைமைதாரா்கள், தங்கள் நிலம் தொடா்பான அசல் ஆவணங்கள், வாரிசு சான்று மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களுடன் கீழே குறிப்பிட்டவாறு அந்தந்த கிராமங்களில், நில எடுப்பு தனி வட்டாட்சியா் தலைமையில் கிராம நிர்வாக அலுவலா் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களின் போது ஆஜராகி, ஆவணங்களை அளித்து, இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் கிராமம், நேரம் பிப்.17ஆம் தேதி முற்பகல்: சாலையாம்பாளையம் (மேற்கு), பனையபுரம். பிற்பகல்: மழவராயனூா், பனப்பாக்கம், பிப்.18ஆம் தேதி முற்பகல்: வேங்கடதிரி அகரம், கப்பியாம்புலியூா். பிற்பகல்: பஞ்சமாதேவி, குச்சிப்பாளையம் (வடக்கு), பிப்.19 முற்பகல்: அரசமங்கலம், மேல்பாதி கிராமம், பிற்பகல்: கள்ளிப்பட்டு, மாதிரிமங்கலம், பிப். 20 முற்பகல்: கோலியனூா், பனங்குப்பம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.