tamilnadu

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா ஆலோசனை கூட்டம்

விழுப்புரம், மார்ச் 24- கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கூறியதாவது:- தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாயன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தியாவசிய கடைகளான பால், காய்கறி, இறைச்சி, மீன் கடைகள், மளிகை கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் இயங்க அனுமதி இல்லை. இதை நகராட்சி ஆணையர்கள் மற்றும் சம்மந்தபட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் எந்தவொரு கடைகளிலும் கூட்டமாக நின்று பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க ஒரு மீட்டர் இடை வெளியில் தடுப்பு கட்டைகள் அமைக்க கடை உரிமை யாளர்களிடம் நகராட்சி ஆணையர்கள் மற்றும் சம்பந்தபட்ட அலுவலர்கள் வலியுறுத்த வேண்டும். அனைத்து உணவகங்கள், நடமாடும் உணவகங்கள் மற்றும் இதர சாலையோர நடமாடும் உணவகங்கள்  மூடப்பட வேண்டும். விடுதிகளில் தங்கும் மாணவர்களின் நலன் கருதி பார்சல் மூலம் உணவுகள் எடுத்து செல்ல மட்டுமே அனுமதிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அத்தியாவசிய அவசிய பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து பஸ்கள், ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்கள் இயங்க அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.