tamilnadu

img

பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை கேட்டு விவசாயிகள் சாலை மறியல்

மத்திய கூட்டுறவு வங்கி முற்றுகை

தஞ்சாவூர், அக்.23 - பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகையை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்மையாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பேராவூரணியில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து  வங்கி முன்பாக சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த அம்மையாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 7 வருவாய் கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்  பயிர் காப்பீட்டுக்காக பணம் செலுத்தி இருந்தனர். இந்நிலையில் 253 விவசாயிகளுக்கு ரூபாய் 54 லட்சம் பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை வந்துள்ளதாக கூறப்படு கிறது. ஆனால் இந்த தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும், பேராவூரணியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கிய பிறகுதான் பணம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேராவூரணியில் உள்ள தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்களை சந்தித்து முறையிட்டனர்.  அங்குள்ள அதிகாரிகள் அளித்த பதிலில் திருப்தியடையாத நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் க.ரவி, ஆர்.பி.நடராஜன் ஆகியோர் தலைமையில், வங்கியை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து வங்கி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறையினர் விவசாயிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விவசாயிகள் வங்கிக் கணக்கில் இழப்பீட்டு தொகை விரைவாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து  சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.