வெலிங்டன்:
“கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாங்கள் வென்றுவிட்டோம்” என, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய் பரவலிலிருந்து நியூசிலாந்து “மோசமாவதைத் தவிர்த்தது” என்று கூறியுள்ள ஆர்டென் ஆனால் தொடர்ந்து வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும்; வைரஸ் தொற்று சமூகத்தில் பிரதிபலிக்கவில்லை; இந்தப் போரில் நாங்கள் வென்றுள்ளோம்; இந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்ள நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்; நாங்கள் பொருளாதாரத்தைத் திறக்கிறோம், ஆனால் மக்களின் சமூக வாழ்க்கையைத் திறக்கவில்லை என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்து கொரோனா பரவலை தடுத்துவிட்டதா பிரதமர் ஜெசிந்தா ஆர்டனிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு அவர் “தற்போது” என்று பதிலளித்தார். “ரோனாவிலிருந்து அனைத்து மக்களையும் மீட்கவேண்டும். வைரசை முழுமையாக ஒழிப்பது என்பது “இது வைக்கோல்போரில் ஊசியைத் தேடுவது போன்றது” என்றும் கூறினார். நியூசிலாந்து சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் கூறுகையில், வைரஸ் பரவலை தடுத்து விட்டோம். அதற்காக நியூசிலாந்தில் தொற்றே இல்லையென்று கூறவில்லை. புதிதாக தொற்று பரவினால் அது எவ்வாறு பரவுகிறது என்பதை சுகாதாரத்துறையினர் கண்டறிவார்கள். கொரோனா ஒரு “தந்திரமான வைரஸ்”. நியூசிலாந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நியூசிலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில், திங்கள்கிழமை நள்ளிரவு முதல் சில தளர்வுகள் கொண்டுவரவுள்ளோம் என்றார்.
திங்கட்கிழமை காலை ஒன்பது மணி நிலவரப்படி 1,469 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், 1,180 பேர் குணமடைந்துவிட்டனர்; 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து பேருக்கு தொற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.