வேலூர், மே 28-சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வண்டலூர், கிண்டி உயிரியல் பூங்காக்களிலிருந்து அமிர்தி உயிரியல் பூங்காவுக்கு பல்வேறு வன விலங்குகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்ட வன அலுவலகத்துக்குட் பட்டது அமிர்தி வன உயிரியல் பூங்கா. வேலூரிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த உயிரியல் பூங்கா கடந்த 1967-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு புள்ளி மான்கள், மயில்கள், முயல் கள், முதலைகள், நீர்ப் பறவைகள், மலைப் பாம்பு, முள்ளம்பன்றிகள், பருந்து, கண்ணாடிவிரியன், நாகப்பாம்பு, காதல் பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவுக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துக் காணப்படும். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமிர்தி உயிரியல் பூங்காவுக்கு கூடுதலாக விலங்குகள் கொண்டுவர வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.சுருள் கொம்புகளைக் கொண்ட வெளிமான், கடமான், பறவை வகைகளில் கூழைகிடா, செந்நாரை உள்ளிட்டவையும், அரியவகை மலைப்பாம்பு, விஷம் குறைவான பச்சைப் பாம்பு, நீர்ப் பாம்பு உள்ளிட்ட பாம்பு வகைகளும் வண்டலூர் பூங்கா, கிண்டியில் உள்ள தேசிய பூங்காவில் இருந்து அமிர்தி வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமிர்தி உயிரியல் பூங்காவிலுள்ள முதலைப் பண்ணை ரூ. 10 லட்சம் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு தற்போது 2 பெண் முதலைகள் விடப்பட்டுள்ளன.சாத்தனூர் அணையில் இருந்து கூடுதலாக முதலைகள் கொண்டு வரப்பட்டு அமிர்தி பூங்காவில் விடவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள் ளனர்.இதுதவிர, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக அமிர்தி உயிரியல் பூங்காவில் ரூ. 10 லட்சம் மதிப்பில் உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.