tamilnadu

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை

வேலூர், ஜூன் 2-தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை முதல் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச்10-ஆம் தேதி வெளியிடப்பட்டதை அடுத்து அன்று முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. இதனால், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மே 26-ஆம் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதையடுத்து மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்    நாளை   முதல்  நடத்தப்பட உள்ளது. இம்முகாமில், கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத, வாய் பேசாத, கண் பார்வை குறையுடைய, கண்பார்வையற்ற, மனவளர்ச்சி குன்றிய , மன நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மூலம் பரிசோதித்து மாற்றுத் திறனாளிகளுக்கு ஊனத்துக்கான சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் வேலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.