வேலூர் திருவண்ணாமலையில் திங்களன்று தொடங்கிய நடைபயணம் வியாழனன்று (நவ.28) வேலூர் மாவட்டத்திற்குள் நுழைந்தது. மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையிலான இக்குழு, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து, வெள்ளேரி, அப்பந்தாங்கல் வழியாக வேலூர் மாவட்ட எல்லையை அடைந்தது. முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடை பயணத்தில் ஈடுபட்டிருந்த இளம் பெண்கள், அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் நடைபயணத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் நடைபயண குழுவிற்கு நிதியளித்து ஆதரவு தெரிவித்தனர்.
மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா நடைபயணம் குறித்து கூறிய போது, இந்த நடை பயணம் துவங்குகிற போது, அதிமுக அரசும், காவல் துறையும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக, தேசிய குற்ற ஆவண காப்பக தகவலை தெரிவித்துள்ளனர். அந்த தகவல் தவறாக பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரமாகும். பெண்கள் மீதான வன்முறை குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்தால், அந்தப் புகாரை ஏற்பதிலும், எப்ஐஆர் பதிவு செய்வதிலும், நீதிமன்றம் செல்வதிலும், அந்த வழக்கில் வெல்வதிலும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதிலும் பெரும் சவால்கள் நிறைந்துள்ளது. நிர்மலா தேவி வழக்கு, அரியலூர் நந்தினி வழக்கு உள்ளிட்டவைகளில் போதுமான ஆதாரங்களை காவல்துறை சமர்ப்பிக்கவில்லை. காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்ல மக்கள் அச்சம் கொள்கின்றனர். போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரியதண்டனை கிடைக்க, அந்த சட்டத்தின் ஷரத்துகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்று கூறினார்.
போதைக்கு எதிரான கோரிக்கைகளை வைக்கும் போது, பெரு வாரியான பெண்களிடம் வரவேற்பு கிடைக்கிறது. அந்தந்த பகுதி பெண்கள் தங்கள் ஊர் எல்லை வரை எங்களுடன் நடைபயணமாக வருகின்றனர். மாதர்சங்கத்தின் நடைபயண கோரிக்கைகளால் ஈர்க்கப்பட்ட ஏரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, மலர், சந்தோஷ், ரவி ஆகியோர் நடைபயண குழுவினருடன் தொடர்ந்து பயணித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.