நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18 அன்று நடைபெற உள்ள நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை ரத்து செய்வதாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இத்தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலூர் தொகுதியில் எதிர்க்கட்சியினரைக் குறிவைத்து வருமான வரி சோதனை உள்ளிட்ட அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டன. இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்றும் ஆளும் கட்சியினரின் அரசியல் அழுத்தம் இதன் பின்னால் உள்ளது என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு முற்றிலும் பாரபட்சமானது, ஜனநாயகத்திற்கு இழுக்கு என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.