திருப்பத்தூர் அருகே உள்ள நாயக்கனூரில் கட்டப்படும் தடுப்பணை தரமற்ற முறையில் இருப்பதாக கூறி, அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நாயக்கனூர் பகுதியில் தடுப்பணை ஒன்று பொதுப்பணித்துறையின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்டு வருகிறது. ஜவ்வாது மலையிலிருந்து ஆண்டியப்பனூர் தடுப்பனையில் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் ஊத்தகங்கரை மற்றும் சாத்தனூர் வழியாக சென்று வீணாகிறது.
இதனை தடுக்கும் வகையிலும் நாயக்கனூரை சுற்றியுள்ள 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில், ரூ. 2.41 கோடி மதிப்பில் அணைக்கட்டும் பணிகள் துவங்கியுள்ளது. நீண்ட நாட்கள் அணை வலுவாக இருக்கும் வகையில், இதனை கட்டாமல் ஒப்பந்ததாரர் அதிகளவு ஆற்று மண்ணை கொண்டும், குறைந்த அளவு சிமெண்ட்டை கொண்டும் தடுப்பணையை கட்டி வருவதாக அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் ஒரு மழை வெள்ளம் வந்தாலே தடுப்பணை வெள்ளத்துடன் அடித்து சென்றுவிடும் என்று கூறி நாயக்கனூர் கிராம மக்கள் ஒப்பந்ததாரர் ஆறுமுகம் என்பவரை இன்று முற்றுகையிட்டு பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அணையின் கட்டுமான பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று இந்த அணை கட்டும் பணியை ஆய்வு செய்து தரமாக கட்டிக்கொடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.