ஹர்தோய்:
நாட்டுக்கு நல்ல பிரதமர் மந்திரிதான் வேணுமே தவிர... பிரச்சார மந்திரி(மோடி) அல்ல என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.
ஹர்தோயில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, அகிலேஷ் மேலும் பேசியிருப்பதாவது:
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி என்பது மற்ற கூட்டணி போல சாதாரண கூட்டணி என நினைக்க வேண்டாம். இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் கூட்டணி நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்.
இந்த கூட்டணி ஏழைகளுக்கான கூட்டணி. கிராமத்தில் வசிப்பவர்களுக்கான கூட்டணி. பல ஆண்டுகளாக கௌரவம் கிடைக்காத மக்களுக்கான கூட்டணி. வயலில் இறங்கி வியர்வை சிந்தி வேலை பார்க்கும் மக்களுக்கான கூட்டணி ஆகும்.
ஆனால், மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைப் பறித்த பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையைத்தான் பாஜக பின்பற்றி வருகிறது.
எங்களால் நாட்டுக்கு ஒரு வலுவான பிரதமரை தர முடியாது என்று பாஜக கூறுகிறது. ஆனால் நாங்கள் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்... எப்பொழுதெல்லாம் நாட்டுக்கு ஒரு வலுவான பிரதமர் தேவைப்பட்டாரோ, அப்பொழுதெல்லாம் ஒரு வலுவான மற்றும் புகழ்பெற்ற பிரதம மந்திரியை கூட்டணி கட்சிகள்தான் நாட்டுக்கு வழங்கியிருக்கின்றன. அது வருகின்ற தேர்தலிலும் நடக்கும்.நாட்டுக்கு ஒரு நல்ல பிரதமர் மந்திரி வேண்டுமே தவிர... பிரச்சார மந்திரி தேவை இல்லை.
இவ்வாறு அகிலேஷ் பேசியுள்ளார்.