tamilnadu

மோடியை எதிர்த்து ராணுவ வீரர் போட்டி


வாரணாசி, ஏப். 1 -மக்களவைத் தேர்தல் பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதி யில் போட்டியிட உள்ளதாக முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அறிவித்துள்ளார்.ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜ் பகதூர் யாதவ். முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை வீரரான இவர், கடந்த 2017ஆம்ஆண்டு ஜனவரி மாதம் எல்லையில் பணியில் இருந்தபோது காணொலிக் காட்சி ஒன்றை வெளியிட்டார். ராணுவவீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என்றும் மூத்த அதிகாரிகள் உணவுப் பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர் என்றும் அந்த காணொலியில் தேஜ் பகதூர் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் காணொலி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேஜ் பகதூர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.அவர்தான் தற்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். “தேர்தலில் ஜெயிப்பதோ, தோற்பதோ என்னுடைய நோக்கமில்லை; ராணுவ வீரர்கள் விஷயத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது; ராணுவ வீரர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பதை அம்பலப்படுத்தவே நான் போட்டியிடுகிறேன்” என்று தேஜ் பிரதாப் கூறியுள்ளார்.