லக்னோ:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படுபவர் மசூத் அசார். ஜெய்ஷ்-இ- முகமது இயக்கத் தலைவரான இவர், அண்மையில், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் அவை இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால், மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது, மோடியின் சாதனை என்று பாஜக-வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இளைஞர்கள் அனைவரும் தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.இந்நிலையில்தான், மசூத் அசார் பெயரை, தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்கான விளம்பரமாக பாஜக பயன்படுத்துகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான் மசூத் அசாரை விருந்தாளி போல் நடத்தியது. அவரை சிறையிலிருந்தும் விடுவித்தது. தற்போது தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, அதே மசூத் அசார் பெயரையே பாஜக தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது என்று மாயாவதி கூறியுள்ளார்.
நாட்டின் எல்லை பகுதிகள் முழுமையாக பாதுகாப்பாக இல்லை. அதனால்தான் எல்லையில் தொடர்ந்து அத்து மீறல்களும், ஊடுருவல்களும் நிகழ்கின்றன. ஆனால், பாஜக தலைவர்கள் அதனை மறைத்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்றும் மாயாவதி சுட்டிக்காட்டியுள்ளார்.