tamilnadu

ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கிறேன்... என்னைக் கருணைக்கொலை செய்து விடுங்கள்..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னைக் கருணைக்கொலை செய்து விடுமாறு,அம்மாநில முதல்வர் ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதீப் சர்மா. வயது 39. உருளைக்கிழங்கு விவசாயி ஆவார். இவர் தான் ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், விவசாயம் பொய்த்ததாலும், சாகுபடி செய்த விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காததாலும், ரூ. 35 லட்சம் வரை கடனாளியாகி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், “ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நடத்துவது மிகவும் கஷ்டமாக உள்ளது; பிரதமர் மோடி வழங்கிய ரூ. 2 ஆயிரம் எனது கவலைகளைத் தீர்த்து விடாது; சாவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை; எனவே என்னைக் கருணைக் கொலை செய்யுமாறு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதீப் சர்மா கூறியுள்ளார்.

“முதல்வரால் கருணைக் கொலை செய்ய முடியாவிட்டால், என்னை நானே தற்கொலை செய்து கொள்ளவாவது அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ள பிரதீப் சர்மா, தனது கடிதத்துடன், மோடி அரசு வழங்கிய 2 ஆயிரம் ரூபாயையும் ஆதித்யநாத்திற்கே திருப்பி அனுப்பியுள்ளார்.