tamilnadu

img

தலித் அமைப்புகள் ஜனாதிபதியை சந்திக்கின்றன

 

புதுதில்லி, ஜூலை 31-

பாஜக, மத்தியிலும், உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்தபின் தலித்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தலித் அமைப்புகள் இந்தியக் குடியரசுத் தலைவரைச் சந்திக்க இருக்கின்றன.

தலித் அமைப்புகளின் சார்பில் தலைநகர் தில்லியில் செவ்வாய் அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பில் கே. ராதாகிருஷ்ணன், ராமச்சந்திர டோம் (தலைவர் மற்றும் செயலாளர்), உதித் ராஜ் (தேசியத் தலைவர், அகில இந்திய தலித்/பழங்குடியினர் சங்கங்கள்), அசோக் பாரதி (அகில இந்திய அம்பேத்கர் மகா சபா). சுனிதா குமார் மற்றும் முன்னிசிங் (பாம்செப்), ஓம்வீர் மற்றும் பீர் சிங் (பிஎஸ்என்எஸ்), சுமேத் போத் (ராஷ்ட்ரிய தலித் மகிளா அந்தோலன்), எம்.எல். கரோலியா (ஆவாம் சங்) மற்றும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

பின்னர் கூட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மோடி-2 அரசாங்கம் பொறுப்பேற்றபின்னர் நாடு முழுதும் தலித்துகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்கள் பட்டியலிப்பட்டிருந்தன. மக்களவையில் 2019 ஏப்ரல் 1க்கும் ஜூன் 15க்கும் இடையே தலித்துகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் 99 நடைபெற்றிருப்பதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டிருக்கிறது. இவ்வாறு நடைபெற்ற அட்டூழியங்களில் காவல் நிலையங்களிலேயே பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, பெண்கள் கொலை செய்யப்படுதல், கலப்புத்திருமணம் செய்துகொள்வோர் கொல்லப்படுதல், குண்டர் படையினரால் கொல்லப்படுதல், மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களும் அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்திடவோ, இக்கொடூர செயல்களில் ஈடுபட்ட கயவர்களைத் தண்டித்திடவோ இங்கே ஆளும் அரசாங்கங்கள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.  மேலும் இம்மாநிலங்களில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் போதிய பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் பணிசெய்வதன் காரணமாக இறக்கும் கொடுமையும் நடந்து வருகின்றது.

மேலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் தலித்துகளுக்கான கல்வி உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டும், துப்புரவுத் தொழிலாளர்கள் நலனுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதன் காரணமாக தலித்துகள்/ பழங்குடியினர்/ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்வது என்பதும் அநேகமாக இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஏனெனில் தனியார் நிறுவனங்கள் எதுவும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதில்லை.

மேலும் மத்திய அரசு, தலித்/பழங்குடியினர்களில் நிலமற்றவர்களுக்கு நிலம் அளிப்பதற்குப் பதிலாக அவர்களை அவர்கள் வாழும் இடங்களிலிருந்தே விரட்டியடித்திடும் வேலையிலும் இறங்கியிருக்கிறது. அரசின் உதவியுடன் கார்ப்பரேட்டுகள் நிலங்களைக் கபளீகரம் செய்திடும் வேலைகளும் தொடங்கியுள்ளன. சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போன்பத்ரா மாவட்டத்தில் 3 பெண்கள் உட்பட 11 பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் விரைவில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளிப்பது எனத் தீர்மானித்திருக்கின்றனர்.

அவர்கள் மேலும் பல அமைப்புகளின் நிர்வாகிகளையும் சந்தித்திடவும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக ஒரு வலுவான ஒன்றுபட்ட இயக்கத்தைக் கட்டி எழுப்பிடவும் திட்டமிட்டுள்ளனர்.  இத்தகைய ஒற்றுமை நாடு தழுவிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் போராட்டங்களுக்கு அனைத்து ஜனநாயக அமைப்புகளும், சமூக இயக்கங்களும் மற்றும் அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்திட வேண்டும் என்றும் அவர்கள்  கோரியுள்ளனர்.

(ந.நி.)