முன்னணி இணைய உலாவியான ஃபயர்பாக்ஸ் (Firefox Browser) 70ஆவது பதிப்பை வெளியிட்டுள்ளது. எப்போதும் பயனருக்கு வெளிப்படையான சிறந்த அம்சங்களை வழங்கும் ஃபயர்பாக்ஸ் இப்போதும் அப்படியான புதிய வசதிகளை வழங்கியிருக்கிறது. புதிய மாற்றங்களுக்கேற்ப லோகோவையும் சற்றே வடிவம் மற்றும் வண்ணம் மாற்றி வெளியிட்டிருக்கிறது.
இணையப் பாதுகாப்பு அறிக்கை
இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில், நாம் திறக்கும் இணையதளங்கள், அதில் காட்டப்படும் விளம்பரங்கள், லிங்க்குகள் உள்ளிட்டவற்றில் நம்மைக் கண்காணிக்கும் மற்றும் பின்தொடரும் அம்சங்கள் இருந்தால் அவற்றை தடைசெய்து பாதுகாப்பான இணைய உலாவலை உறுதி செய்திருக்கிறது. இதுகுறித்த விபரங்களை ரிப்போர்ட் வடிவில் காட்டும் வசதியையும் வழங்கியிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலமாக நம்மைக் கண்காணிப்பவர்களிடமிருந்து பாதுகாப்பு, மூன்றாம் நபர் விளம்பரதாரர்கள் மற்றும் தகவல் திரட்டுபவர்களிடமிருந்து பாதுகாப்பு, இணைய தள விளம்பரங்கள், வீடியோக்கள், பின்தொடரும் நிரல்கள் கொண்ட தளங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு, இணைய உலாவி மூலம் உங்கள் கைரேகைகளை டிஜிட்டல்பிரதியாக சேமிக்கும் இணையதளங்களிலிருந்து பாதுகாப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க உருவாக்கப்படும் கிரிப்டோமைனிங் நிரல்கள் ஆகியவற்றைத் தடை செய்யும் பாதுகாப்பு என ஐந்து பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது, இது தொடர்பான ரிப்போர்ட்களை பார்க்க உலாவியின் மெனுபாரில் பிரைவஸி புரடெக்சன்ஸ் என்பதைக் கிளிக் செய்து விரிவான விபரங்களைஅறிந்து கொள்ளலாம்.
பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் லாக்வைஸ்
நம்முடைய மின்னஞ்சல் தகவல்கள் இணையத்தில் பாதுகாப்பாக உள்ளதா என்பதை அறியும் டேட்டா பிரீச்சஸ் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மற்றொரு வசதியாக லாக்வைஸ் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் இணையதளங்களில் பயன்படுத்தும் யூசர்நேம், பாஸ்வேர்ட்களை பதிவு செய்து வைத்துப் பாதுகாப்பாக பயன்படுத்த உதவும் இந்த வசதி விண்டோஸ் கணினி, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் சாதனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கணினி, ஸ்மார்ட்போன், ஐபேட் என எந்த சாதனத்திலும் ஃபயர்பாக்ஸ் லாகின் செய்து நுழையும்போது உங்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை எளிதாக உள்ளிட இந்த வசதி பயன்படுகிறது.
டாஸ்க் மேனேஜர்
கணினிகளில் மென்பொருள்களின் தற்போதைய செயல்பாட்டை அறிய பயன்படுத்தும் டாஸ்க்மேனேஜர் வசதியைப் போலவே ஃபயர்பாக்ஸ் பிரௌசரில் திறந்துள்ள இணையதளங்கள், ஒவ்வொரு தளமும் பயன்படுத்திய டேட்டா அளவு என்பது போன்ற விபரங்கள் காட்டுகிறது. டெஸ்க்டாப் கணினியில் இந்த விபரங்களை ஃபயர்பாக்ஸ் உலாவி மெனுவில் மோர் (More) என்ற பிரிவிலிருந்து பெறலாம்.
சரிசெய்யப்பட்ட ஸீரோ-டே குறைபாடு
பயர்பாக்ஸ் உலாவியில் ஸீரோ-டே (Zero-day) என்னும் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்த மோசில்லா நிறுவனம், ஃபயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஃபயர்பாக்ஸ் இஎஸ்ஆர் (Firefox ESR) ஆகியவற்றை பயன்படுத்தும் பயனர்களை அப்டேட் செய்யும்படி எச்சரித்திருந்தது. இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தி வேறு ஒருவர் ஃபயர்ஃபாக்ஸ் பயனரின் கணினியில் உள்ள நிரலை (Code) எளிதில் மாற்ற முடியும் என கண்டறியப்பட்டது. ஃபயர்பாக்ஸ் 67ல் இக்குறை சரிசெய்யப்பட்ட பிறகு அடுத்தடுத்த பதிப்புகள் விரைவாக மேம்படுத்தப்பட்டன. தற்போது வெளியிடப்பட்டுள்ளது 70வது பதிப்பாகும். மேற்கண்ட வசதிகளைப் பெறவும், பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஃபயர்பாக்ஸ் உலாவியின் 70வது பதிப்பை அப்டேட் செய்துகொள்ளவும்.
===என்.ராஜேந்திரன்===