internet

img

வாட்ஸ்அப்பில் 6 புதிய வண்ணங்கள்... செயலிகள் தரும் புதிய வசதிகள்

வாட்ஸ் அப் செயலியில் தற்போது டார்க் மோட் வசதிக்கு மாற்றாக பின்புலத்தில் ஆறு புதிய அடர் வண்ணங்களில் பின்புலத்தை அமைத்துக்கொள்ளும்வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கறுப்பு, டார்க் ப்ரவுன், அடர் நீலம், ஆலிவ் நிறம், டார்க் பர்பிள் மற்றும் டார்க் வெல்வெட் ஆகிய 6 வண்ணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட நிறங்களை உங்கள் சாட் விண்டோவின் பேக்கிரவுண்டாக மாற்றிக் கொள்ள வாட்ஸ்அப் செயலியைத் திறந்து Settings->Chats option->Wallpaper->Solid Colour என்பதைத் திறந்து அங்குள்ள வண்ணங்களில் உங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்து பின்புலம் அமைக்கலாம். வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் பயன்படுத்தும்போது அது உங்களது ஸ்மார்ட்போனின் பேட்டரியை சேமிக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்ட் 9 பதிப்புக்கு முந்தைய போன்களிலிருந்து இந்த சொற்றொடர் நீக்கப்பட்டுள்ளது. அடர்ந்த நிறங்கள் ஒளிரும் வெளிச்சத்தைக் குறைப்பதால் பேட்டரி திறனை இயல்பாகவே குறைக்கும். குறிப்பாக இந்த செயல்பாடு எல்இடி டிஸ்ப்ளே அம்சம் கொண்ட போன்களுக்குத்தான் பயனளிக்கும். மற்ற போன்களில் நம் கண்களுக்கு மிகுந்த வெளிச்சத்தைப் பார்ப்பதிலிருந்து விடுவித்து பாதுகாப்பைத் தரும் வகையில் வேண்டுமானால் இந்த நிறங்கள் பயன்படலாம்.

வாட்ஸ்அப் பே சேவை
இதோ அதோ என்று பல நாட்களாக கூறப்பட்டு வந்து வாட்ஸ்அப்பின் யுபிஐ பேமண்ட் சேவைக்கு நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் லிட் (NPCL) தற்போது அனுமதி வழங்கியுள்ளது. வாட்ஸ்அப் ஆப் வைத்திருப்பவர்கள் பணம் அனுப்பும் சேவையையும் இதன் மூலம் பெறமுடியும். கடந்த 2018ஆம் ஆண்டே சோதனை அடிப்படையில் ஒரு சிலருக்கு மட்டும் வாட்ஸ்அப் பே சேவை வழங்கப்பட்டது. ஆனால் டேட்டா பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியாவில் சர்வரை நிறுவினால்தான் அனுமதி வழங்கப்படும் என்று என்பிசிஎல் கூறியதையடுத்து, தாமதமாகி வந்த இந்த சேவை, சர்வர் நடைமுறைகளுக்கு தீர்வு காணப்பட்டதை அடுத்து அனுமதி கிடைத்துள்ளது. இச்சேவை முதற் கட்டமாக ஒரு கோடி வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு வழங்கப்படுமென்றும், அடுத்து படிப்படியாக மற்ற பயனாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பேமண்ட் சேவை தொடங்கப்பட்டால், இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் பேமண்ட் சேவையாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கூகுள் மேப்புக்கு 15 வயது
கூகுள் மேப் சேவை தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக அதன் லோகோ வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கூகுள் மேப் சேவை கடந்த பிப்ரவரி 8, 2005-ஆம் ஆண்டில் அறிமுகமானது.செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஏரியல் வியூ காட்சி, ரியல்-டைம் டிராஃபிக், ஸ்ட்ரீட் வியூ என்று பல வசதிகள் இச்சேவையில் வழங்கப்பட்டு வருகின்றன. பயண வழிகாட்டியாக கூகுள் மேப் சேவை மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. 15 ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதிய மாற்றங்களும் வசதிகளும் இதில் கொண்டு வரப்பட்டுள்ளன. ‘எக்ஸ்புளோர் டேப்’ (explore tab) மற்றும் கம்யூட் டேப் (Commute tab) என்ற வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எக்ஸ்புளோர் டேப் என்பது நாம் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள், திரையரங்குகள், கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் நுட்பமாக கண்டறிந்து காட்டும். கம்யுட் டேப் என்பது சொந்த வாகனத்திலோ அல்லது பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்திலோ பயணிக்கும்போது விரைவாக வீட்டிற்கு வரும் வழியை காட்டுவதற்கு பயன்படும். 

போன்பே ஏடிஎம்
முன்னணி வாலட் மற்றும் பேமண்ட் சேவை நிறுவனமாக போன்பே ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது. இதற்கென ஏடிஎம் இயந்திரங்களை நிறுவாமல் தங்கள் நெட்வொர்க்கில் இணைந்திருக்கும் கடைகளை வங்கி போலப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, போன்பே பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பெற போன்பே பயன்படுத்தும் வணிகரிடம் சென்று செயலி மூலம் பணத்தை கடைக்காரருக்கு அனுப்ப வேண்டும். அதைப் பெற்றுக்கொண்டு அவர் அதற்கு ஈடான தொகையை ரொக்கமாக வழங்குவார். இதற்குக் கூடுதல் கட்டணம் ஏதும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருநாளைக்கு வங்கி விதிமுறையைப் பொறுத்து அதிகபட்சமாக எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ அந்த அளவு வரை வாடிக்கையாளர்கள் ரொக்கத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும். இந்த வசதிக்காக தற்போது பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களை போன்பே இணைத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 20 லட்சம் ஏடிஎம்கள் கொண்ட நெட்வொர்க்கை உருவாக்க உள்ளதாக போன்பே நிறுவனம் அறிவித்துள்ளது. அருகாமையில் உள்ள போன்பே சேவை மையங்களை தேடுவதற்கான வசதியும் ஆப்பில் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் பணம் இல்லாமலிருக்கும் சூழலிலும், ஏடிஎம் மையங்கள் இல்லாத பகுதிகளிலும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். பே-டிஎம், அமேசான் பே, கூகுள் பே முதலிய பிற முன்னணி இணையப் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்களில் இந்தச் சேவை இல்லாத நிலையில், அவற்றுக்குப் போட்டி போடும் வகையில் இந்தச் சேவையை போன்பே ஆரம்பித்துள்ளது. 

போன்பே ஆப்பில் மேலும் ஒரு வசதியாக பயனாளர்கள் மற்றொரு பயனாளருடன் சாட் முறையில் உரையாட வாட்ஸ்அப் போன்ற வேறு சாட் ஆப்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இனி ஏற்படாது. பயனர்கள் போன்பே ஆப் மூலமே தங்களுக்குள் உரையாடல்களை நிகழ்த்திக் கொள்ள முடியும். விரைவில் குரூப் சாட் வசதியையும் கொண்டுவர போன்பே திட்டமிட்டுள்ளது. இது பயனர்கள், தங்கள் குடும்பத்தார் அல்லது வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்புவது பெறுவது போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

===என்.ராஜேந்திரன்===