world

img

பேஸ்புக் வாட்ஸ் அப் முடக்க எதிரொலி - டெலிகிராமுக்கு 7 கோடி புதிய பயனர்கள்

பேஸ்புக், வாட்ஸ் அப் முடக்க எதிரொலியாக ஒரே நாளில் டெலிகிராமில் புதிதாக 70 மில்லியன் பயனாளர்கள் சேர்ந்துள்ளனர்.

ஃபேஸ்புக், வாட்ஸ் -அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களும் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9 மணியிலிருந்து முடங்கின. இந்த மூன்று தளங்களும் ஒரே நேரத்தில் முடங்கியதால் இதன் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உலகம் முழுவதும் ஏற்பட்ட இந்த முடக்கத்தைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்குப் பிறகு ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் பழையபடி செயல்பாட்டிற்கு வந்தன. 

இதனிடையே ஃபேஸ்புக் செயலி முடங்கிய அந்த 6 மணி நேர இடைவெளியில் புதிதாக 7 கோடி பயனாளர்கள் டெலிகிராமில் சேர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கூறுகையில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் அதிகமான புதிய பயனாளிகள் அந்த நேரத்தில் எங்களிடம் சேர்ந்தனர். அதுமட்டுமன்றி பழைய பயனாளர்களும் மிக அதிக நேரம் எங்கள் செயலியைப் பயன்படுத்தினர்.

திடீரென நடந்த இந்த அதீத அதிகரிப்பை, எங்கள் ஊழியர்கள் மிகச்சிறப்பாகக் கையாண்டனர். இந்த விஷயத்தில் எங்கள் ஊழியர்களை நினைத்து எனக்குப் பெருமையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடக்கத்திற்குப் பின் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ரூபாய் 52 ஆயிரம் கோடி குறைந்தது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.