tamilnadu

img

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு.....

தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் செவ்வாயன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலை யத்தில் கண்காணிபு மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தின் மூலம் மாவட்ட ஆட்சியரை தலைவராகக்கொண்டு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சத்யராஜ், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியலார் ஜோசப் பெல்லார்மின் அண்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் அமர்நாத், கனகவேல் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலை பகுதிக்கு சென்று செவ்வாயன்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதியையும் ஆக்சிஜன் தயாரிப்பு பகுதியில்இருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள்யாரும் செல்லாத வகையில் அமைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளையும் பார்வையிட்டனர். ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பகுதிக்கு வரும் பணியாளர்களை எந்த பாதையில் உள்ளே அனுமதிப்பது என்பது குறித்தும் ஆக்சிஜன் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் வந்துசெல்லும் தனியான பாதை குறித்தும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதிக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் இப்பகுதிக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர். ஆக்சிஜனை வழங்க குழு அனுமதித்துள்ள எடை மேடை அமைக்கப்படும் பணிகள் குறித்தும் பார்வையிட்டனர். மேலும் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் ஆக்சிஜன் தயார் செய்ய பராமரிப்பு பணிகள் மற்றும் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை வல்லுநர் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, குழு உறுப்பினர்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை அலுவலர்கள் உடனிருந்தனர்.