tamilnadu

img

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பெயரில் நுழைவுவாயில், கலையரங்கம் அமைத்திடுக..... முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்....

தூத்துக்குடி:
மக்களின் நீண்டநாள் கோரிக்கையான எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பெயரில்  நுழைவுவாயில், கலையரங்கம் அமைக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன், முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளை முன்னிட்டு  செப்டம்பர் 11 சனிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தூத்துக்குடிமாவட்டம் எட்டயபுரத்தில் அவரதுஇல்லத்திற்குச் சென்று பார்வையிட்டார்.பாரதியார் போல் வேடமிட்டிருந்த குழந்தைகளை பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கே.பாலகிருஷ்ணன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

நாடு அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் இந்திய நாட்டு மக்களை, தமிழ்நாட்டு மக்களை தனது பாடல்களால் தட்டியெழுப்பியவர் மகாகவிபாரதியார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே அவரைக் கண்டு நடுங்கியது. பிரிட்டிஷ் அரசு நடுங்கக்கூடிய வகையில் தனது பேனா முனையால் அதிர்வேட்டுகளை உருவாக்கியவர். இதனால் பாரதியாரை தனிமைச்சிறையில் அடைத்துகொடுமைப்படுத்தினர். பிரிட்டிஷ்காரர்களின் அடக்குமுறைக்கு அஞ்சாமல்தனது இறுதிமூச்சு வரை நாட்டின்சுதந்திரத்திற்காகப் போராடினார். அதுமட்டுமல்லாமல் பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தும், சாதிய ஏற்றத்தாழ்வை எதிர்த்தும் வருணாசிரமத்தை எதிர்த்தும் சமூக நீதி, தாய்மொழிக்கல்வி ஆகியவற்றை வலியுறுத்தியும் கவிதைகள், கட்டுரைகள் எழுதியவர். மகாகவிபாரதியாரை நினைவுகூரும் வகையில் பெருமை சேர்க்கும் வகையில் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளஅறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று, நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

பாரதியாரின் எழுத்துக்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை எல்லாம் தொகுத்து புத்தகங்களாகவும் அகராதிகளாகவும் கொண்டுவருவது, மாணவ,மாணவிகளுக்கு பாரதியார் குறித்து இலக்கியப் போட்டிகளை நடத்தி,பரிசுகளை வழங்குவது, பாரதியார் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகளை வழங்குவது போன்ற  அறிவிப்புகளை செய்துள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் பாரதியார் நிலைத்திருக்க இத்தகைய அறிவிப்புகள் பயன்படும்.எட்டயபுரத்தில் ஊருக்குள் நுழைகிற பகுதியில் அவரது பெயரில் நுழைவுவாயில், கலையரங்கம் அமைக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக நிலங்கள் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டு,அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எட்டயபுரத்து மக்களின் கோரிக்கையை அத்திட்டத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றித்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

பாரதியார் விடுதலைப் போராட்டக்கவிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர், சமூகநீதிக்காக போராடியவர் மட்டுமல்ல, அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளராக இருந்தார் என்று வரலாற்று ஆவணங்கள் மூலம் பார்க்க முடிகிறது. பாரதியார் கண்ட கனவுகளை இந்த மண்ணில் நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வோம் என்று அவரது நினைவுநாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சபதம் ஏற்றுக்கொள்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ஜூனன்,மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், எட்டயபுரம் தாலுகா செயலாளர் ரவீந்திரன்,  தாலுகாக்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், நடராஜன், பாலமுருகன், முருகேசன், நகர்க்குழு உறுப்பினர்கள் சந்நியாசி, தனபால், சிஜடியு ஆட்டோ சங்க தலைவர் கண்ணன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.