tamilnadu

img

அமைச்சர்கள் செல்வது சுற்றுலா பயணமாக தெரிகிறது... தொல். திருமாவளவன் விமர்சனம்

தூத்துக்குடி:
அதிமுக ஆட்சி முடியும் நேரத்தில் அமைச்சர்கள் வெளிநாட்டு  பயணம் செல்வது, அரசு செலவில் சுற்றுலா பயணமாக செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் “டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் விழாவையொட்டி ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு அறிவித்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்குமுழுமையாக ஒத்துழைப்பு தருவது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இதனால் வட மாநிலத்திலிருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்த மக்களின் சதவிகிதத்தை பொறுத்து உணவு பொருட்களை வழங்க வேண்டும்.  மத்திய, மாநில அரசுகளுக்கு இத்திட்டம் சிக்கலாக மாறும். தமிழக அரசு எடுத்துள்ள இந்த நிலைபாடு சுதந்திரமாக எடுக்கப்பட்ட நிலைப்பாடாக தெரியவில்லை. 

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை  தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் கைது செய்யப்படுவார் என ஹெச்.ராஜா கூறியிருப்பது மோடி அரசு பலரை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து ஈடுபட்டு  வருவதை காட்டுகிறது.  நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும்  தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு கண்டனத்திற்குரியது. காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும். திடீரென கட்டண உயர்வு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்.தமிழகத்தில் தொழில் துறையில் முதலீடுகளை ஈர்க்க  வெளிநாடு பயணம் மேற்கொண்டதாக முதல்வர் கூறியிருக்கிறார். அவர் வந்த பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கப்படும். திடீரென அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது புதுமையாக இருக்கிறது, ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அமைச்சர்கள் சுற்றுப்பயணம்  செய்யவில்லை. ஆட்சி முடியப் போகின்ற தருணத்தில் அமைச்சர்களின் வெளிநாடு சுற்றுப்பயணம் அரசு செலவில் சுற்றுலா பயணமாக செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அவர்கள் சுற்றுப் பயணம் செல்வது தமிழகத்தின் வளர்ச்சிக்காக இருந்தால் அது வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்தார்.