சென்னை:
விவசாயிகள் மீது ஒடுக்குமுறையை ஏவிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் வன்முறைக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பேற்று பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்ட பாதையில் லட்சக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் சென்றனர். அப்போது ஒரு சில இடங்களில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைப் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் காவல்துறையினர் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் விவசாயிகள் பலர் சிதறி தில்லி நகரின் மையப் பகுதியை நோக்கி ஓட நேர்ந்தது. அப்படி போனவர்களில் சிலர் செங்கோட்டையில் தேசியக் கொடியை கையில் ஏந்திப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். குடியரசு தினத்தில் நடந்துள்ள இந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் மோடி அரசின் பிடிவாதப்போக்கும் மெத்தனப் போக்குகளுமே காரணமாகும்.
விவசாயிகள் மீது அதிகார மமதையுடன் ஆணவப்போக்குடன் ஒடுக்குமுறையை ஏவியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கவேண்டும். வறட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் மோடி அரசு அந்த மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் உடனே திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதுவரை நேரிட்ட அத்தனை உயிரிழப்புகளுக்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
துப்பாக்கி பிரயோகமா?
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் குடியரசு நாளில், 60 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் முன் கூட்டியே தெரிவித்து டிராக்டர் அணி வகுப்பு நடத்தும் நிலையில், அவர்கள்மீது கண்ணீர்ப் புகைக் குண்டுவீசியதும், தடியடி கொண்டு கொடூரமாக தாக்கியதும் மிகவும் கண்டனத்துக்கு உரியது. அமைதி வழி போராட்டம் நடத்தினால் துப்பாக்கிப் பிரயோகமா? அடக்கு முறையைக் கைவிட்டு, அமைதி வழி போராடுவோரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யட்டும்! குடியரசு நாளில் தலைநகரில் விவசாயிகள்மீது தாக்குதல் செய்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பொது மரியாதையைக் குலைக்கும். விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போதாதா? இப்பொழுது விவசாயிகளையும் அடிக்கும் காரியத்தில் ஈடுபடுவதா? அமைதியான சூழலை அரசே வன்முறை மூலமாக மாற்றிவிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.