தஞ்சாவூர், மே 22- தஞ்சாவூரை அடுத்துள்ள மருதகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் குமார் (41). இவருடைய மனைவி கமலாதேவி (31), இவர்கள் இருவரும் கமலாதேவியின் தாயார் சந்திரா(55) வீட்டிலேயே வசித்து வந்தனர். குமார்-கமலாதேவியின் தம்பதியினருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்புதான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இந்நிலையில் கடந்த 17-ம் தேதி கமலாதேவியின் சகோதரருக்கு செங்கிப்ப ட்டியில் திருமணம் நடந்துள்ளது. இத்திருமண த்திற்கு சென்று வந்த குமார், மனைவி கமலாதேவியிடம், பிறந்துள்ள குழந்தைக்கு மாமியார் நகை போடவில்லை, மைத்துனர் திருமணத்தில் தனக்கு மரியாதை இல்லை என கூறி சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து குமார் அருகில் இருந்த கட்டையால் கமலாதேவியை அடித்து சுவற்றில் தலையை மோதியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கமலாதேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் குமார் மீது அவரது மாமியார் சந்திரா வல்லம் காவல்துறையில் புகார் அளித்தார். உடனே குமார் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமலாதேவி புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான, காவலர்கள் வல்லத்தை அடுத்துள்ள அய்யாசாமிப்பட்டியில் பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர்.